Saturday, March 28, 2009

அழகான சூழ்நிலை பற்றிய வர்ணனை மற்றும் உமரின் ஆர்ப்பாட்டமான வெற்றியுடன் துவங்குகிறது புதினம். ஆரம்பத்திலேயே உமரின் உடல் வலிமை, அவரின் குணம் மற்றும் தான் என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றிய தெளிவு போன்றவற்றை மிகத்தெளிவாக சுறுக்கமாக ஆசிரியர் சொல்வதன் மூலம் முதல் மூன்று அத்தியாயங்களின் பக்கங்கள் நகர்வது தெரியாமல் படிக்கும் அளவுக்கு ஆர்வத்தை தூண்டுகிறார்.

புத்தகத்தின் பெயர் மற்றும் புத்தத்தை எழுதிய ஆசிரியரின் பெயரை படித்ததும் இது ஒரு மதம் சம்பந்தப்பட்ட நூலாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் படிக்க ஆரம்பித்தால் படிப்பவர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள் ஏனெனில் இது ஒருவரின் ஆளுமையைப் பற்றிய புத்தகமாக விளங்குகிறது.

புத்தகத்தில் பல நிகழ்வுகள் நம் கண் முன்னே நடப்பதுபோல் அழகாக விவரித்துள்ளார் ஆசிரியர். ஒருவர் தான் பெற்ற பெண் குழந்தையை குழியில் புதைக்கும் நிகழ்ச்சியை விவரித்துள்ள விதம் மிக அருமையாக உள்ளது. அதேபோல் உமர் நபி அவர்களை முதன் முதலாக சந்திக்கும் தருணமும் பதட்டமும் பரவசமும் கலந்து அழகாக உள்ளது.

சில அத்தியாயங்களில் போர் நடந்தவிதம் அதில் ஏற்பட்ட சிக்கல்கள், வெற்றிகள், சில சோகமான நிகழ்வுகள் என்று நகரும்போது மட்டும் படிக்கும் வேகம் சற்று குறைகிறது. ஆனாலும் இந்த அத்தியாயங்களில் நபி அவர்களால் சொல்லப்பட்ட, போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் அவரின் மன்னிக்கும் தன்மை போன்றவற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.

உமர் கலீஃபா பதவி ஏற்ற பிறகு அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகள் மூலமாக ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் போது படிப்பவர்கள் நம்முடைய தற்போதைய ஆட்சியாளர்களை மனதளவில் ஒப்பிட்டு பார்ப்பது இயல்பாகவே நடக்கும். தனிநபர் வழிபாடு கூடாது என்று அவர் வழியுத்தும் போதும், தன்னுடைய மகன் தவறு செய்ததும் சட்டத்தின் முன் அனைவரும் சமம், கலீஃபா தவறுசெய்தாலும் தண்டிக்கப்படவேண்டியவரே என்று கூறி தன்னுடைய மகனுக்கு தண்டனை வாங்கித்தருவது போன்ற விசயங்களை படிக்கும் போது நம்முடைய ஆட்சியாளர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு நிச்சயம் குறையும்.

ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை அல்லது சட்டத்தை அமல்படுத்தும் போது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, தவறு என்று தெரிந்தாலும் எதிர்க்கட்சியின் போரட்டத்திற்கு பிறகே அந்த சட்டம் திருத்தப்படும். பால் குடியை நிறுத்திய குழந்தைகளுக்கே உதவித்தொகை என்று அறிவித்து பின்னர் அதனால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்து கண்ணீர் விட்டு சட்டத்தை மாற்றியமைக்கும் போது தான் ஆட்சியாளர் அல்ல மக்களே ஆட்சியாளர்கள் என்று அவர் கூறியதை உண்மையிலேயே கடைபிடித்தார் என்பதை அறியலாம்.

இன்றுவரை உழைப்பாளர்கள் எதற்காகப் போரடிவருகிறார்களோ அதை அந்தகாலத்திலேயே, உழைப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, ஊதியம் பற்றி நபி அவர்கள் கூறியதையும், உமர் அதை நடைமுறைப் படுத்திய விதத்தையும் படிக்கும் போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உதாரணமாக உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்குள் அவர்களுக்குறிய ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்பதும், உமர் தன்னுடைய பணியாளரை ஒட்டகத்தில் ஏற்றி தான் நடந்து சென்று பணியாளரும் தம்மைப்போல் ஒரு மனிதரே என்று அவருக்கு சம மரியாதை கொடுப்பதையும் சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு விசயம் உமரின் கிருஸ்துவர்களுடனான தொடர்பு. கிருஸ்துவ தேவாலயத்தில் தொழுகை நடத்த மறுப்பதும் அதற்கு அவர் கூறும் காரணம் போன்றவற்றால் உமர் நம்மை ஆச்சரியப்படவைக்கிறார். கிழிந்துள்ள தன்னுடைய உடையை தைக்கும் வேலையில் அணிந்திருப்பதற்காக ஒரு கிருஸ்துவரின் உடையை வாங்கி அணிந்திருந்தார் என்று படிக்கும் போது தற்போதைய நிலவரங்களை மனதில் வைத்துள்ள நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

ஆரம்பத்தில் தான் சார்ந்த கலாச்சாரத்தில் இருந்து விலகிச்செல்லும் மக்களைக் கண்டால் முரட்டுத்தனமாக தாக்குவதும், இந்த மாற்றத்திற்கு காரணமான நபி அவர்களை கொல்ல வேண்டும் என்ற முரட்டுக் கோபத்தில் அலைவதும், பின்னர் இதே உமர் நபி அவர்களின் சொல்லுக்கேற்ப அடங்கி நடப்பதும், நுஅமானின் மரணச்செய்தியை கேட்டு ஒரு குழந்தை போல் அழுவதும், படிப்படியாக உண்மை என்ன என்பதை புரிந்துகொண்டு சூழ்நிலைக்கேற்ப வீரம், இரக்கம், தலைமை தாங்குதல் என்று பக்கத்திற்கு பக்கம் உமரின் உணர்வுகள் மாறிவரும்போது அவரைப் பற்றி நம்மால் முழுமையாக உணரமுடிகிறது.

அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று போரடியவர்கள் யார் என்று கேட்டால் லிங்கன் போன்றோர்கள் தான் நினைவிற்கு வருவார்கள் ஆனால் அந்த காலத்திலேயே உமர் போன்றோர் ஒரு சிறு படையை வைத்துக் கொண்டு ”அடிமை என்று யாருமில்லை நாம் அனைவரும் கடவுளுக்கு மட்டுமே அடிமை” என்று கூறி போர் புரிந்தார் என்று படிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

பஞ்சம், பட்டினிக் கொடுமைகள் அதிகரித்த காலத்தில் அவருடைய நடவடிக்கைகள் மிக உயர்வாக உள்ளது. மக்கள் தான் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் ஆட்சியாளர் அல்ல, உன்மையில் மக்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்று கூறி நேரடியாக மக்களின் வீட்டிற்கே சென்று பிரச்சனைகளை கவனித்து தீர்த்து வைக்கும் போதும், கலீஃபா தவறு செய்துவிட்டார், மக்களின் பிரச்சனையை தெரிந்து கொள்ளாத இந்த கலீஃபா தேவையில்லை என்று மக்கள் கூறும் போது கண்ணீர் விடுவதுமாக அவர் பின்பற்றிய எளிமையான வாழ்க்கை முறை எவராலும் பின்பற்ற இயலாதது.

சில இடங்களில் அவர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பேசுகிறார். பின்னர் அடுத்து வரும் பக்கங்களில் அவர் அந்த விதிமுறைகளை நடைமுறைப் படுத்துகிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுவது அதற்கேற்ப ஆளுநர்களை மக்கள் முன் நிற்கவைத்து விசாரித்து தண்டனை கொடுப்பதும். தன் மீது வந்த வழக்குகளை முறையாக விசாரிக்காத நீதிபதியை கண்டிப்பதும். ஆளுநரின் மகன் என்று தெரிந்தும் சட்டத்தின் முன் சமம் என்று கூறி தண்டிப்பதுமாக தான் பேசும் வார்த்தைகளுக்கும் செய்யும் செயல்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை நிருபிக்கிறார்.

உமர் கொல்லப்படுவதை ஆசிரியர் விவரிக்கும் விதம் நிச்சயமாக எல்லோராலும் பாராட்டப்படும். அதிகாலையில் இருந்து மெல்ல மெல்ல விடியலைப்பற்றி கூறி தொழுகைக்கு செல்லுதலில் ஆரம்பித்து மென்மையாக மெதுவாக விவரித்து திடிரென்று அதிர்ச்சியூட்டம் அந்த நிகழ்ச்சியை பற்றி சொல்கிறார்.

புத்தகத்தை படித்து முடித்ததும் உமர் என்கிற ஆட்சியாளர் சொன்ன ஒரு விசயம் நமது ஞாபகத்திற்கு வரும் “எனக்குத்தான் முதலில் பசிக்கும், எனக்குத்தான் கடைசியில் பசி அடங்கும்”

உமர் புத்தகத்தை வாங்க இந்த Link-ஐ பயன்படுத்துங்கள்: http://nhm.in/shop/978-81-8493-048-1.html