Wednesday, April 29, 2009

இந்த புத்தகத்தை பொருத்தவரை படித்து முடித்தது நன்றாக இருந்தது, விறுவிறுப்பாக இருந்தது என்று படித்துவிட்டு தூக்கிப்போடவேண்டிய புத்தகம் அல்ல இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விசயங்களையும் நாம் பயன்படுத்தி பார்க்க வேண்டும்

என்னைப் பொருத்தவரையில் நான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே என்னுடைய குறைகள், நான் வேலை செய்யுமிடத்தில் இதுவரை செய்து வந்த சில நுட்பமான தவறுகள் போன்றவை தெரியவந்தது.

நம் முன்னேற்றத்திற்கு தேவையான விசயங்களை படிப்படியாக விதி ஒன்று, விதி இரண்டு என அழகாக வரிசைப்படுத்தி அதில் முக்கியமான விசயங்களை ஒவ்வொரு பகுதியிலும் சிறு கட்டத்தில் குறிப்பிட்டுள்ளது சிறப்பாக உள்ளது.

நமக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காதா என நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் பல விசயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவோம், பல விசயங்களை தேடியலைந்து கற்றுக் கொள்வோம், நேர்தியாக உடையணியோம், ஆனால் வேலை கிடைத்த பிறகு வேலைதான் கிடைத்துவிட்டதே என்ற எண்ணத்தில் நம்முடைய நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற்றிவிடுவோம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த சம்பளத்தில் திருப்தியடைந்துவிடுவோம், பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒரு நாள் வேறு வேலையைத் தேடிச்செல்வோம். ஏன் அந்த வேலையில் நம்மால் முன்னேற முடியவில்லை என தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த புத்தகத்தை படித்த பிறகு வேலை கிடைத்த பிறகு நாம் கவணிக்க வேண்டிய விசயங்கள் இவ்வளவு இருக்கிறதா! நம்மிடம் இவ்வளவு குறைகள் இருக்கிறதா! என ஆச்சரியப்படுவார்கள்.

போதுவாக வேலை கிடைத்ததும் தற்போது வாங்கும் சம்பளத்தைவீட அதிகமாக வேறு எந்த கம்பெனியில் சம்பளம் கொடுக்கிறார்கள் அவர்கள் எப்போது வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் எப்போது அந்த கம்பெனிக்கு நம்முடைய விபரங்களை அனுப்ப வேண்டும் என்றுதான் நம்முடைய திட்டமிடல்கள் இருக்கும். ஆனால் வேலைக்கு சேர்ந்த கம்பெனியிலேயே நாம் எதிர்பார்க்கும் சம்பளம் மற்றும் வளர்ச்சியடைவது எப்படி அதற்கு நம்முடைய திட்டமிடல்கள் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்று இந்த புத்தகம் விளக்குகிறது.

இந்த புத்தகத்தில் உள்ள பல விசயங்களில் எப்படி உடை அணிவது, அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்வது, நம்முடைய பேச்சு எந்த மாதிரியாக இருக்க வேண்டும் போன்ற விசயங்களை உடனே நம்மால் செய்ல்படுத்தி பார்க்க முடியும். ஆனால் சில விசயங்கள் நிச்சயமாக உடனே சாத்தியப்படாது கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியப்படும் ஏனெனில் அவை நம்முடைய அடிப்படையான பண்புகளை சார்ந்தவையாக உள்ளன. நம்முடைய போரடும் குணம், எதையும் ஆக்கபூர்வமாக சிந்திப்பது, வாய்ப்புகள் வரும்போது தயங்காமல் பயன்படுத்த முயல்வது போன்றவற்றை படித்த உடனே நம்மால் செயல்படுத்த முடியாது தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். உதாரணமாக விதி மூன்றில் அச்சுறுத்தல்களை ஒரு வாய்ப்பாக, ஆக்கபூர்வமான விசயமாக எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான் அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சுகிறோமே தவிர அதை ஆக்கபூர்வமான விசயமாக நாம் அதை கருதுவதில்லை. ஆனால் நிஜமான சூழலில் அதை ஆக்க பூர்வமாக கருத இயலுமா என்று தெரியவில்லை இதை ஒரு பயிற்சியாக நினைத்து செய்துபார்க்கலாம். அதேபோல கோபம் பற்றி ஆசிரியர் கூறியுள்ள விசயமும் அப்படித்தான். அந்த சூழ்நிலையில் நமக்கு வரும் கோபத்தை கட்டுப்படுத்த அல்லது முறையாக வெளிப்படுத்த தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றபடி இந்த விதியை நாம் பின்பற்றினால் தேவையற்ற மன அழுத்த நோய்களில் இருந்து தப்ப முடியும்.

நீங்கள் Rule player ஆக வேண்டுமா அதற்கு நூறு சதவீத ஈடுபாடு மற்றும் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். எந்த விசயத்தில்? எல்லா விசயங்களிலும். உடை அணிவதில், பேசுவதில், பழகுவதில், பணியாற்றுவதில் என அனைத்து விசயங்களிலும் நூறு சதவீத ஈடுபாடுடன் இருக்க வேண்டும். அதே சமயத்தில் உங்கள் வேலையை வேலையாக மட்டுமே பாருங்கள் அலுவலக நேரம் முடிந்தும் அதைப்பற்றி சிந்திப்பது, எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருப்பது, வேலையைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தேவையற்றது இதை தவிர்த்து உங்கள் குடும்பம் உங்கள் நலன் மற்றும் பொழுதுபோக்கும் அம்சங்கள் என கவணம் செலுத்துங்கள் என்றும் கூறுகிறார். உண்மையில் இது சாத்தியப்படுமா என தெரியவில்லை ஒருவரால் இப்படி இரண்டு விதமாக மனதை கட்டுப்படுத்தி செயல்படுத்த முடியுமா! என்னதான் முயற்சியெடுத்டாலும் கடுமையாக உழைக்கும் போது ஏற்படும் மனரீதியான பிரச்சனைகள் வீடுவரை வந்தே தீரும். இதனால் ஒரு சமயத்தில் நாம் சலிப்படைந்துவிடுவோம் .

புதிய வேலையா ஜாக்கிரதை – பற்றி கூறப்பட்டுள்ள விசயங்கள் அனைத்தும் உண்மையே நானே பல முறை இந்த விசயத்தில் ஏமாற்றமடைந்துள்ளேன். என்னிடம் கொடுக்கப்பட்ட புதிய வேலைகளில் என்னுடைய திறமையை காண்பிற்பதாக நினைத்துச் செய்த பல வேலைகள் தொடர்ந்து என்னிடமே வருகின்றன அதாவது என்னை அந்த வேலையில் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர எனக்கு எந்த உபயோகமும் இல்லை.

படித்துக் கொண்டிருக்கும் போது சில விசயகள் நமக்கு ஏற்கனவே நிகழ்ந்த சில சம்பவங்களாகவே இருந்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன உதாரணமாக அதிகாரம் யாரிடமிருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள் – இது முற்றிலும் உண்மையே இந்த விதி மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு துறையிலும் இது போன்ற நபர்கள் இருப்பார்கள்.

பாரதியார் பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரையில் யோகம் என்பது நாம் செய்யும் செயலுக்கு நம்மை தகுதியுடையவனாக மாற்றிக் கொள்வதுதான். எந்த செய்லை நாம் செய்கிறோமோ அந்த செயலாகவே மாறிவிட வேண்டும் என்று பாரதியார் கூறியது போல் இந்த புத்தகத்தில் ஆசிரியர் உங்களுக்கு என்ன பதவி வேண்டுமோ அந்த பதிவியில் இருப்பவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அதே போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள் அதாவது உங்களுக்கு அந்த பதவிக்குறிய தகுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். உடை விசயத்தில் ஆரம்பித்து எல்லா விசயங்களையும் பின்பற்ற சொல்கிறார். மற்றொரு இடத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக நேரம் செலவிடச் சொல்கிறார் இது முற்றிலும் புதுமையாக இருந்தது ஏனெனில் மூத்த அதிகாரியை கண்டால் நாம் நம்முடைய இயல்பான நடத்தையை விட்டு பதட்டப்பட ஆரம்பித்துவிடுவோம் ஆசிரியர் கூறியபடி அவர்களிடம் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தால் அவர்களிடம் நாம் பதட்டப்படாமல் இருக்க முடியும். ஆசிரியரின் விதிகளில் என்னை கவர்ந்த விதிகள் இவை.

குறிப்பிட வேண்டிய மற்றொறு விசயம் அலுவலகத்திற்கு நாம் வரும் நேரம் மற்றும் அலுவலகத்தை விட்டு வெளியேறும் நேரம் பற்றி கூறியுள்ளது. பொதுவாக எல்லோருமே திருத்திக்கொள்ள வேண்டிய விசயம் இது.

பல விதிகளை பின்பற்ற முடியுமா முடியாதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டாலும் ஒவ்வொரு விதியாக முயற்சி செய்து பயன்படுத்தி பார்த்தோமானால் அந்த முயற்சியிலேயே நாம் பக்குவப்பட முடியும் அதன் மூலம் நிச்சயமாக நம்மால் சிறந்த வேலைத்திறனை வெளிப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்படுத்த கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.

URL: http://nhm.in/shop/978-81-317-2561-0.html