Tuesday, May 26, 2009

கிழக்கு பதிப்பகத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது அவர்கள் புத்தகத்தை வடிவமைக்கும் விதம். புத்தகத்தை பார்த்தவுடன் இந்த புத்தகத்தை வாங்கலாம் என்ற எண்ணம் மனதில் ஏற்படும் விதமாக அழகாக வடிவமைக்கிறார்கள். முருகனின் கதைகள் புத்தகமும் அப்படித்தான் உள்ளது.

நான் படித்த மிகப்பெரிய கதை புத்தகம் இதுதான். இரா.முருகனின் கதைகள் கொலை, கொள்ளை என்று பரபரப்பாக நகரும் கதையோ, காதல், கவிதை என்று ரசனையான கதையோ அல்ல. கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்ல ஒபாமா, உமர் போன்ற ஆளுமைமிக்க கதாபாத்திரங்கள் இல்லை நேற்று நம் தெருவில் உள்ள அந்த வீட்டில் என்ன நடந்தது தெரியுமா என்று நாம் பேசிக்கொள்வோமே அதுபோன்ற இயல்பான விசயங்களைக் கொண்ட அழகான கதைகள் இவை.

பல வருடங்களுக்கு முன்பு நான் கதை புத்தகங்கள், நாவல்கள், வார இதழ்களில் வரும் தொடர்கதைகள் போன்றவற்றை படித்து இருக்கிறேன். படிக்கும் போது கதையின் போக்கு ஒரே கோர்வையாக நகரும் ஆனால் இரா.முருகன் அவர்களின் கதைகளை படிக்க ஆரம்பித்தவுடன் முதல் கதையான சுற்றம் என்ற கதையை படிக்கும் போது ஒன்றுமே புரியவில்லை, குழப்பத்துடன் அடுத்த கதையான வண்டி கதையை படித்தபோது ஆச்சரியப்படும் விதமாக மிகவும் நன்றாக இருந்தது. ஏன் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது என்று யோசித்தபோது அவர் எழுதும் முறை மிகவும் வித்தியாசமாக இருந்தது தான் காரணம் என புரிந்தது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடு என்ற படம் பார்த்திருப்பீர்கள். நாமே வீடு கட்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இயல்பான படம் அது. இந்த கதைகளை படிக்கும் போது அந்த படம் பார்த்த மாதிரிதான் இருந்தது.

கதையில் ஆசிரியர் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமும் அருமையாக உள்ளது. ஒவ்வொருவரைப் பற்றியும் வர்ணனை செய்து அறிமுகப்படுத்தாமல் இயல்பாக கதையின் போக்கிலேயே காதாபாத்திரங்களின் மூலமாகவே புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். உதாரணமாக பெரிய பெரிய சூட்கேஸ்களை அநாயசமாக தூக்கித் திறந்து காட்டிக் கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. வேலாயுதம் சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்தார். சிதம்பரம் யாருக்கோ வி.சி.ஆர் இயக்கிக் காட்டிக் கொண்டிருந்தார் என்று முக்கிய கதாபாத்திரத்தின் மூலமாக மற்ற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தத்தாத்ரேயன் என்ற கதாபாத்திரத்திடம் இருக்கும் கடவுள் சிலையை எடுத்துக் கொண்டு தரமறுக்கும் அவரது குழந்தை ‘வேண்டுமானால் நி இந்த பொம்மையை வச்சுக்கோ’ என வேறு ஒரு விளையாட்டு பொம்மையை கொடுப்பதை படிக்கும் போதும், ராஜுவின் அம்மா தமிழ் சினிமாவில் இண்டர்வெலுக்கு இருபது நிமிசம் முன்போ பின்போ பொறிகலங்க கதாநாயகியை அறைந்து தாலியின் பெருமை பற்றியும், மலையாளத்தில் புதுயுகம் பிறக்க புரட்சியின் வித்தை வயிற்றில் சுமந்த தாயாகவும், தெலுங்கில் ராம நாம மகிமை பற்றியும், கன்னடத்தில் தூய்மையான உள்ளத்தின் அவசியம் பற்றியும் சொந்தக் குரலில் கண்ணீர் மல்க பாடியவள் என்று படிக்கும் போது ஆசிரியர் நாசுக்காக நடைமுறையில் உள்ள பல விசயங்களை கிண்டல் செய்கிறாரா அல்லது கதையைத்தான் சொல்கிறாரா என சிந்தனை செல்கிறது. பல இடங்களில் இது போன்று நாமாகவே சிந்தித்து சில விசயங்களை புரிந்து கொண்டு ரசிக்கும்படியாக உள்ளது.

கதையோடு ஒன்றி படித்துக் கொண்டிருக்கும் போது கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஈடுபடும் செயல்கள் சில நம்மையரியாமலேயே சில இடங்களில் சிரிப்பை வரவலைக்கின்றன உதாரணமாக ‘எழுத்ததிகாரம்’ கதையில் வரும் ராமு என்ற சிறுவனின் இயல்போடு நாமும் சேர்ந்து செல்லும் போது திடிரென்று கடுப்பாகி ‘இந்த வேலைக்கு வேறு ஆளைப் பார்க்கச் சொல்லவும் என்று கடிதத்தில் தன்னுடைய கருத்தையும் சேர்த்தி எழுதும்போதும், தத்தாத்ரேயன் லிப்டில் மாட்டிக்கொண்ட போது தன்னுடைய பெயரைச் சொல்லி பிரச்சனையை விளக்க முடியாமல் வேதனைப்படும் போதும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

புத்தகத்தில் உள்ள கதைகளிலேயே வீதி கதைதான் கொஞ்சம் பெரிய கதை என்று நினைக்கிறேன். இந்தக்கதை ஒரு இடத்தில் நடப்பதுபோல் இல்லாமல் சினிமாவில் வரும் திரைக்கதை போல அவ்வவ்போது வேறு வேறு இடங்களில் மாறி மாறி நடப்பதுபோல் எழுதப்பட்டுள்ளது. அதனால் சில சமயங்களில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. பொதுவாகவே இது இயல்பான கதையாக அமைந்திருப்பதால் சில இடங்களில் கதையில் தோய்வு ஏற்பட்டதுபோல் அமைந்துவிடுகிறது.

ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிற போது அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கும் விதமாக ஆசிரியரின் எழுத்து அமைந்துள்ளது. வீதி கதையில் வரும் வெள்ளைக்காரன் கால் ஆடுகிற முக்காலி மேல் அதை ஆக்கிரமிப்பது போலக் கால் பரப்பி உட்கார்ந்தான் – எப்படி உட்கார்ந்தான் என்பதை நாம் கற்பனை செய்யும் விதமாக இப்படி எழுதிகிறார். ‘விரைவீக்கம் இல்லையென்றால் அதிவீர்யம். அக்கரைச் சீமையில் இவனால் டாக்டர்களுக்கோ, வெள்ளைக்காரிகளுக்கோ சீரான சந்தோஷம் என்று தீர்க்கமாக விதிக்கப்பட்டிருக்கிறது’. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளையும் மிக ஆழமாக யோசித்து எழுதியிருக்கிறார்.

ஆசிரியரிடம் நான் ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால், அவர் எழுதியுள்ள கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என்னென்ன தொழில்களில் இருக்கிறார்களோ அந்த தொழிலில் நிஜமான மனிதர்கள் இருந்தால் எந்த மாதிரி பாசையில் பேசிக்கொள்வார்களோ அதே போல் எழுதியுள்ளார். முதல் ஆட்டம் என்ற கதையில் வரும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை படிக்கும் போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது ஏனெனில் உண்மையாளுமே அந்த தொழிலில் இருக்கும் மக்கள் பேசிக்கொள்ளும் விதம் எப்படி இருக்குமோ அதை அப்படியே எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஒவ்வொரு கதையும் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் தான் ஆனால் அந்த நான்கைந்து பக்கங்களிலேயே கதையில் வரும் ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் அங்கிருக்கும் சூழ்நிலை அதாவது அந்த தெரு எப்படி இருந்தது, கடிதம் எழுதச்சொன்ன பெரியவரின் வீடு எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றையும் நம் கண்முன் நிறுத்துகிறார் இதன் மூலம் இயல்பாகவே கதையில் நாம் ஒன்றிவிடுகிறோம்.

படம் பார்ப்பதுபோல் ஒவ்வொரு காட்சியாக விளக்கியிருப்பதால், ”மாதவன் என்ற கதாபாத்திரத்திற்கு செருப்புகள் நுழைகிற கால்களோடு கூடத்து சுவரில் மாட்டி இருந்த பிளாஸ்குக்காகக் அவரது கைகள் நீளுவது தனிச்சையாகிப் போனதும், புதியதாக வீடு கட்டி அதை பெருமிதத்துடன் ரசித்துக் கொண்டே, தண்ணீரில் நின்று கொண்டு மின்சார விளக்கு பொருத்தும் வேலையில் ஈடுபட்டு மின்சார அதிர்ச்சியில் பூர்ணசந்திரன் இறந்து போனதை படிக்கும் போது நம் வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருவில் நடக்கும் விசயங்களை கவணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இயல்பான, எதார்த்தமான கதைகளை படிக்க விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பிடிக்கும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-253-4.html