Wednesday, October 28, 2009

ஒருவர் சாதனை புரிந்ததும் கை தட்டிவிட்டு, கை குழுக்கிவிட்டு, சென்றுவிடாமல் அந்த சாதனையாளரின் வாழ்க்கையை பற்றிய விசயங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம். அப்படி அறிந்துகொள்வதன் மூலமாக நம்முடைய செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளை பற்றி கவலைப்படாமல் உத்வேகத்துடன் செயல்பட சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு உதவும். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பெற்றதற்காக தமிழ் திரையுலகினர் விழா எடுத்தபோது பேசிய நடிகர் பார்த்தீபன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியதன் மூலமாக நம்மாலும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார், உண்மையான வார்த்தைகள் அவை. திரை துறையினருக்கு மட்டுமல்லாது அனைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விசயங்கள் அவரது வாழ்க்கையில் இருப்பது தெரிகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக ஒதுங்கிக் கொண்டாலும், அந்த புகழ் பெருவதற்குறிய அனைத்து பணிகளையும் நாமே செய்ய வேண்டும். ரஹ்மான் அவர்களுடைய செயல்பாடுகள் விளக்கும் விசயம் இதுதான். இதையேதான் அவருடைய அம்மாவும் அறிவுரையாக கூறியிருக்கிறார் “எப்பவும் இன்னொருத்தரை நம்பி நீ இருக்கக்கூடாதுப்பா, உன்னால தனியா என்ன என்ன செய்ய முடியும்ன்னு யோசி” தனது இசைப் பயணத்தை துவங்குவதற்கு முன்பாக அவருடைய தாயார் சொன்ன வார்த்தைகள் இவை. புத்தகத்தை படித்து முடித்ததும் இப்போதுவரை அந்த வார்த்தைகளை அவர் பின்பற்றி வந்திருப்பது தெரிகிறது.

சினிமாவில் சில சமயங்களில் கதாநாயகனைவீட சில காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் புகழப்படும் விதமாக அமைந்துவிடும் அது போல ரஹ்மான் அவர்களைப்பற்றிய புத்தகத்தை படித்து முடித்தது, ரஹ்மான் அவர்களைப் பற்றிய விசயங்கள் எதுவும் மனதில் தங்கவில்லை, மற்றொருவர் நம்மை ஆட்கொள்கிறார் அவர் ரஹ்மான் அவர்களுடைய தந்தை சேகர். இரண்டு மூன்று அத்தியாயங்களில் மட்டுமே இவரைப்பற்றிய விபரங்கள் இருந்தாலும் இவர் நம் மனதில் தங்கிவிடுகிறார். மிகக்கடுமையான உழைப்பாளியாக வாழ்ந்த அவரது வாழ்க்கையும் சோகமான அவருடைய இறப்பும் ஒரு தனி புத்தகம் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. புரிகிறதோ இல்லையோ குழந்தை பருவத்திலேயே இசையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று இசையையும், உலகையும் உணர்த்திய சேகர் போன்ற ஒருவர் தந்தையாக கிடைத்த பிறகு ரஹ்மான் ஆஸ்கார் வாங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். புத்தகத்தின் ஈரமான பக்கங்கள் இவை.

ஒன்பதாம் வகுப்பு வரை ஊதாரித்தனமாக சுற்ற விட்டு விட்டு பத்தாம் வகுப்பில் தன் மகன் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என விரும்பும் தந்தைகளுக்கு மத்தியில், சேகர் தன்னுடைய மகனை மிகத் தெளிவாக திட்டமிட்டு சிற்பமாக செதுக்கியுள்ளது தெரிகிறது. தன் மகன் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என கணவு கண்டு கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு சேகர் அவர்களுடைய நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருடைய செயல்களில் இருந்து எல்லா தகப்பன்களும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

புத்தகத்தை படிப்பதற்கு முன்பு வரை திடிரென்று ஒரு இளைஞர் இசைத்துறையில் பிரபலமாகிவிட்டார் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் புத்தகத்தை படித்து முடித்ததும்தான் புரிந்தது, நான்கு வயதிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், முயற்சியுமே அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. திடிரென்று அவர் மலை உச்சியில் தோண்றிவிடவில்லை ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கிறார். அவர் ஆஸ்கார் விருது வாங்கியதை கொண்டாடும் கூட்டத்திற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கை முறை மற்றும் அவருடைய முழுமையான உழைப்பு பற்றி தெரியவில்லை என்றே நினைக்கிறேன். தெரிந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருக்க மாட்டார்கள் ஏனேனில் அவரது உழைப்பிற்கு முன்பாக ஆஸ்கார் மிக சாதாரணமான ஒன்றே. நிச்சயமாக ஆஸ்கார் அவரது பயணத்தில் எல்லையாக இருக்காது. அதுவும் ஒரு தொடக்கமாகவே அமையும்.

நீங்களும் நானும் கண்டிப்பாக அந்த விளம்பரத்தை பார்த்திருப்போம் ஆனால் அவற்றை உருவாக்கியது திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தெரிந்திருக்காது என ஆசிரியர் ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். உண்மைதான் பல விசயங்கள் ரஹ்மானின் அடையாளங்கள் இல்லாமல் நம்மை கடந்து போயிருக்கிறது என்பது ரஹ்மான் பற்றிய புத்தம் படிக்கும்போதுதான் தெரிகிறது.

இளையராஜா பற்றிய விபரங்களை எழுதும்போது ஆசிரியர் நடுநிலமை கடைபிடிக்க முயற்சி செய்திருப்பார்போல் தெரிகிறது. இருவர் பற்றி எழுதும் போதும் ராஜாவின் ரசிகர்கள், ரஹ்மானின் ரசிகரகள் என்ற கண்னோட்டத்திலேயே எழுதியுள்ளார். அது அவசியமே இல்லை, இளையராஜாவை தாண்டி ரஹ்மான் சென்று விட்டார் என்று இனி வெளிப்படையாகவே சொல்லலாம். அதே போல் ரஹ்மான் இளையராஜாவிடம் பணியாற்றியவர் என்ற செய்திதான் பரவலாக தெரிந்திருந்தது ஆனால் இளையராஜா ரஹ்மானின் அப்பாவிடம் பணியாற்றியவர் என்ற விபரம் இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொண்டதும் ஆச்சரியமாக இருந்தது.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அந்த அத்தியாயம் சம்பந்தப்பட்ட தலைப்புகளையே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெய்வம் தந்த பூ, பூவுக்கென்ன பூட்டு, ஓர் அழகைக் கண்டேனே போன்ற தலைப்புகள் கவித்துவமாக இருந்தாலும் தனிமைப்பட்டு நிற்பதாகவே தெரிகிறது.

சிறிய புத்தகம் என்றாலும் ரஹ்மானைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவருடைய சிறுவயதிலிருந்து படிப்படியாக அவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியுள்ளார். விளையாட்டுத்தனமாக ஒரு ஆர்வத்தில் இசை பயின்றது பின்னர் அதுவே வாழ்க்கையாகிப் போனது, குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டது, நண்பர்களுடன் சேர்ந்து இசை குழு ஆரம்பித்தது, இசை தொடர்பாக படித்தது என ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் செயல் முறைகளாக நிறைந்து கிடைக்கிறது. அவருடைய பழக்க வழக்கங்கள் பல அவருடைய சிறு வயதிலிருந்தே பின்பற்றி வந்திருக்கிறார் என்பது தெரிகிறது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர் இரவில் பணியாற்றும் பழக்கத்தை சொல்லலாம்.

உலக தலைவர்கள், உலக சாதனையாளர்கள் என நமக்கு பரிச்சயமில்லாத நபர்களைப் பற்றி படிக்க ஆர்வம் செலுத்தம் நாம், நம் அருகில் இருக்கும் சாதனையாளரான ரஹ்மான் அவர்களைப் பற்றியும் படிக்க வேண்டியது அவசியம். முன்னேற நினைப்பவர்களுக்கு உதவும் நூலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு (URL) செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-187-7.html