Sunday, February 7, 2010

இந்த புத்தகத்தில் படிப்பதற்கு என்ன இருக்கப்போகிறது! மாயாவதி பற்றி படித்து நாம் என்ன செய்யப்போகிறோம்! என்று நினைத்து இந்த புத்தகத்தை நீங்கள் படிக்காமல் விட்டு விட்டால், ஒரு விறுவிறுப்பான அரசியல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விடுவீர்கள். அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் ஒரு வசனம் சொல்வாரே “நாம முன்னேறனும்னா நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் ஏறி மிதித்துவிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே” இந்த புத்தகத்தின் கடைசியில் உள்ள சில அத்தியாயங்களை படிக்கும்போது நிஜ அரசியலும் அப்படித்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமில்லை இப்போதைய அரசியலில். காரியம் ஆக வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், யார் யாரிடம் பணிந்து போக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம் அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

ஒரு மிகச்சிறந்த சதுரங்க ஆட்டத்தை வேடிக்கைப்பார்த்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்குமோ, அவ்வளவு சுவாரசியமாக இந்த அரசியல் சதுரங்கத்தை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். முதலில் வரும் நான்கு ஐந்து அத்தியாயங்கள் வழக்கமாக வரும் பிறப்பு, வளர்ப்பு பற்றியது. ஆனால் அதற்கு பின் அரசியல் ரீதியாக வரும் அத்தியாயங்கள் உண்மையிலேயே மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் செல்கிறது.

முன்னேறியவர்களின் வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விசயம் புரிகிறது. சிறுவயதில் அவர்களை முன்னேறத் தூண்டும் வகையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக அந்த சம்பவங்கள் நம் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் எங்கு வித்தியாசம் ஏற்படுகிறது என்றால், அந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் செயல் முறையையே மாற்றிக்கொண்டு விடுகிறார்கள். அதை ஒரு முக்கியமான நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த நிகழ்வுகளை ஒரு சிறு பிரச்சனை என்ற அளவிலேயே அனுகி அதை அத்தோடு மறந்துவிடுகிறார்கள். மாயாவதியின் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன ஆனால் அவை அனைத்து தலித்துகளின் வாழ்வில் நிகழ்ந்தவைதான். அந்த நிகழ்வுகளை மாயாவதி எப்படி அனுகியிருக்கிறார், அந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றியிருக்கிறார் என்பதுதான் அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சிலருக்கு முன்னேறுவதற்கான அனைத்து விசயங்களும் சரியாக அமைந்தாலும் அவர்களை வழி நடத்த சரியான ஆள் இல்லாமல் தோல்வியடைந்துவிடுவார்கள். மாயாவதிக்கு அப்படியொரு நிகழ்வு நிகழவில்லை, காரணம் கன்ஷிராம் என்றோரு அருமையான குரு மாயாவதிக்கு அமைந்திருக்கிறார். பொதுவாக அரசியலில் வாரிசு போல இருப்பவர்கள், தங்களுடைய குருவை ஏதாவது ஒரு வகையில் மிஞ்சி விடுவார்கள். வளர்ந்த பிறகு திடிரென்று கட்சி மாறிவிடுவது அல்லது புதியதாக கட்சி ஆரம்பித்து தனக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவரின் காலை வாரி விடுவது வழக்கம். ஆனால் கன்ஷிராம் விசயத்தில் அப்படி நடக்காததற்கு மாயாவதி மிக நல்லவர் என்று அர்த்தமில்லை, பிரம்மிக்க வைக்கும் கன்ஷிராமின் திட்டமிடல்தான் கடைசிவரை அவர் நிலை தடுமாறாமல் அரசியலில் இருக்க காரணமாக அமைந்திருக்கிறது. அவரை புரிந்துகொள்ள அவர் சொன்ன ஒரு வாக்கியமே போது “என் கனவுகள் மிகப் பெரியவை” .

தமிழ் நாட்டு அரசியலே பெரிய தலைவலியாக நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரம் படிக்கும்போது நம்ம ஊர் அரசியல் பதட்டமெல்லாம் சாதாரண விசயம் என்று புரிகிறது. மாயாவதியை கன்ஷிராம் சந்தித்தது முதல் அவர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை படிக்கும் போது, இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே! ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார்களே! என சிந்தித்துக்கொண்டு படிக்கும்போதே அடுத்த அத்தியாயங்களில் வந்து விடுகிறது வழக்கமான பிரச்சனைகள். மாயாவதிக்கும் கன்ஷிராமுக்கும் உள்ள உறவு பற்றிய விமர்சனங்கள்... ஊர் மாறினாலும், அரசியல் மாறினாலும் மக்களின் பொதுவான சிந்தனை மாறாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

”கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தனக்கு சிலை வைக்கிறார் மாயாவதி” என்ற செய்தியை படித்ததும், இப்போதுள்ள அரசியல்வாதிகளை தட்டிக்கேட்க ஆள் இல்லை எனவே அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அப்படி நடந்துகொண்டாலும் இந்த மக்களெல்லாம் அவர்களுக்குத்தானே ஓட்டு போடுகிறார்கள் – என்ற சிந்தனை நம் மனதில் எழுவது இயல்பு. இப்படி யோசிக்கும் நாம் மாயாவதியை பற்றி ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறோமா! என்று யோசித்தால் அந்த கேள்விக்கு நம்மிடம் பதில் இருக்காது. மாயாவதியை பற்றி மட்டுமல்ல இந்தியாவில் தற்போதுள்ள எந்த அரசியல்வாதியை பற்றியும் முழுமையாக நமக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அப்படி அவர்களை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொண்டால், அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டால், அவர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வோமா! அல்லது இப்போதுள்ள அளவிற்கு கடுமையான விமர்சனங்கள் இருக்குமா! என்றால் அதில் சந்தேகமே. மாயாவதி புத்தகத்தை படித்ததும் எனக்கு அப்படித்தான் தோண்றுகிறது.

அரசியலை பொருத்த வரையில் எங்கு எது நடந்தாலும் அனைத்து அரசியல்வாதிகளையும் அந்த விசயம் பாதிக்கும் என்பதை மாயாவதியின் வாழ்க்கையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பாபர் மசூதி போன்ற விசயங்கள் மாயாவதியின் வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதும்போது அவரைப் பற்றிய தவறான விசயங்கள் நாசுக்காக சொல்லப்பட்டு, நல்ல விசயங்கள் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் மாயாவதியின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விசயங்களை ஆசிரியர் சம அளவில் வெளிப்படையாக எழுதியிருப்பது பாரட்டத்தக்கது.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மாயாவதியை பற்றி மட்டுமல்ல மற்ற அனைத்து அரசியல்வாதிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. வெறுமனே அவர்களை பற்றி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருக்காமல், அவர்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு விமர்சனம் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு செல்லுங்கள் URL: http://nhm.in/shop/978-81-8493-185-3.html