Friday, April 2, 2010

கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை நோய்கள் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை அனைவரிடமும் இருந்தது. எனக்கு இரண்டு நாட்களாக ஒரே தலைவலி மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஒரு வாரமாக வயிற்று வலிக்கிறது, என்ன செய்தால் குணமாகும்... என்பது போன்ற பேச்சுக்கள்தான் இருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த பேச்சுக்களை முற்றிலும் மாறிவிட்டது. என்னென்னே தெரியல இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாததுபோல் இருக்கிறது மருத்துவரிடம் செல்ல வேண்டும். அந்த பையனுக்கு என்ன உடம்புக்கு – தெரியல அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது மருத்துவரிடம் செல்ல வேண்டும்.... இப்படி மாறிவிட்டது மக்களின் நோய்பற்றிய பேச்சுகள். அதாவது முன்பு தனக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்ற தெளிவான சிந்தனை மக்களிடம் இருந்தது. இப்போது தனக்கு என்ன விதமான நோய் ஏற்பட்டுள்ளது என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை இதனால் மருத்துவர் சொல்வதை அப்படியே தலையாட்டி கேட்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

சமீபத்தில் என்னுடன் பணியாற்றுபவரின் இரண்டு சிறு வயது குழந்தைகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்தார்கள். இரண்டுவார காலம் அவசரசிகிச்சை பிரிவிலேயே வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள். என்ன விசயம் என்று விசாரித்ததில் – நல்லாதான் இரண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் லேசாக தலை சுடுவதுபோல் இருந்தது, சரி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச்சென்றேன். உடனடியாக அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி சிகிச்சையை ஆரம்பித்துவிட்டார்கள். என்ன நோய் என்று கேட்டபோது ஏதோ வைரஸ் காய்ச்சல் என்று சொன்னார்கள்... இப்போதைய நிலமை இப்படித்தான் இருக்கிறது சாதாரணமான தலைவலி, வயிற்றுவலி என்று சொல்லிக்கொண்டு யாரும் மருத்துவரிடம் செல்வதில்லை தங்களுக்கு என்ன நோய் வந்தாலும் அந்த நோயின் பெயருடன் வைரஸ் என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது உண்டாகிவிட்டது.

இப்போதைய சூழ்நிலையில் வைரஸ் நோய் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை பூர்த்தி செய்யும் விதமான புத்தகம் இது. இந்த புத்தகத்தில் ஒருவரை பற்றி நமக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வைரஸ் பற்றியும் ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார். பல வைரஸ்களின் பெயர்கள் நமக்கு புதிதாகவும், புரியாததாகவும் உள்ளது. ஏதோ ஒரு அறிவியல் பாடப் புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த வைரஸின் பெயர் இது, இது இப்படித் தோண்றும், இப்படி வளர்ச்சியடையும், இது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும், அதில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்... இந்த முறையை அடிப்படையாக வைத்தே அனைத்து வைரஸ்கள் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இப்படி பாட புத்தக வடிவில் இல்லாமல் நடைமுறை வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளுடன் இணைத்து சுவாரஸ்யமாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பல வைரஸ்களின் பெயர்கள் நமக்கு புரியாவிட்டாலும் ஒரு சில வைரஸ்கள் நமக்கு முன்பே அறிமுகமானவைதான். உதாரணமாக அம்மை நோய்களை உண்டாக்கும் வைரஸ் பற்றி படிக்கும் போது பல விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மை நோய் என்றது வேப்பிலை, மாரியம்மன் கோவில், வாசலில் ஒரு குடத்தில் வேப்பிலையோடு வைத்திருந்து குளிக்கப்பயன்படுத்தும் தண்ணீர் போன்றவைகள்தான் நமக்குத்தெரியும். ஆனால் அவற்றின் அடிப்படை விசயங்களில் இருந்து முழுமையான ஒரு விபரத்தை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

மற்றொரு நோய் போலியோ, போலியோ என்றதும் எனக்கு ஞாபகம் வருவது முன்பு கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், சினிமாவிற்கு இடையே போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காண்பிப்பார்கள். கால்களில் செயற்கையாக சில விசயங்களை பொருத்திக்கொண்டு நடக்க முடியாமல் குழந்தைகள் நடந்து வருவார்கள் அவர்களை அரவணைத்துக்கொண்டு ரஜினிகாந்த் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி பேசுவார். போலியோ பற்றி நான் அறிந்து வைத்திருக்கும் விசயம் அவ்வளவுதான். இந்த புத்தகத்தின் மூலமாக போலியோ பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்தது. அதுபோல் தான் எய்ட்ஸ் பற்றிய விபரங்களும். எய்ட்ஸ் நோயாளிகளும் நம்மைபோன்றவர்கள்தான் அவர்களை நாம் ஒதுக்கக்கூடாது, கைகளை தொடுவதால், அவர்களுடன் பழகுவதால் நமக்கு நோய் பரவாது என்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டாலும் நமக்கு ஒரு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இந்த புத்தத்தில் எய்ட்ஸ் பற்றி காரண காரியங்களோடு படிக்குக்கும்போது அந்த அச்சம் நம் மனதிலிருந்து விலகிவிடுகிறது

பல நோய்களை பற்றி படித்தாலும் அவற்றால் எனக்கு பாதிப்பு ஏற்படாததால் அவற்றின் அர்த்தங்கள் புரியவில்லை. ஆனால் சிக்குன் குன்யா பற்றி படிக்கின்றபோது மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன் ஏனெனில் இரண்டு முறை சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். சிக்குன் குன்யா வராமல் இருக்க இந்த ஊசியை போட்டுக்கொள்ளுங்கள், எங்களின் இயற்கையான இந்த மருந்துகளை பயன்படுத்தினால் சிக்குன் குன்யா வராமல் தடுக்க முடியும் என்பது போன்ற பல விளம்பர பலகைகளை நான் பார்த்திருக்கின்றேன். சிக்குன் குன்யா பற்றிய விபரம் என்றது நான் தேடியது, இந்த நோய்யை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான். ஆனால் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொண்டேன். இந்த விசயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மருத்துவர்கள் இதுவரை கொடுத்துக்கொண்டிருப்பது இந்த நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மட்டுமே பயன்படுமாம்.

இந்த புத்தகத்தில் மிக முக்கியமானது முதலாவது அத்தியாயமான வைரஸ் பற்றிய அறிமுகமும், எந்தெந்த நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் அடங்கிய இறுதி அத்தியாயமும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பகுதிகள் ஆகும். மற்ற விபரங்கள் பலவிதமான வைரஸ்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-109-9.html