Sunday, December 2, 2018

பைரப்பா எழுதிய இந்த பருவம் நாவலை பத்தி சொல்லணும்னா இது ஒரு முழுமையான மகாபாரத கதை அல்ல இந்த நாவலை படிப்பதன் மூலமாக யாரும் மகாபாரத கதையை தெரிந்து கொள்ள முடியாது ஏற்கனவே மகாபாரத கதையை படித்தவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. அவர்களும் கடைசி வாய்ப்பாக இந்த நாவலை வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்  இது ஒரு உச்சகட்டமான நாவல் ஆரம்பத்திலேயே இதை படித்து விட்டால் அதன் மூலம் ஏற்படும் தர்க்க புத்தி ஆரம்பகட்ட மகாபாரதக்கதை புத்தகங்களுக்கும், பருவம் போன்ற உச்சகட்டமான புத்தகத்திற்கும் இடைப்பட்ட நாவல்களை ரசித்துப் படிக்க முடியாமல் செய்துவிடும். எனவே மகாபாரதம் தொடர்பாக படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் இறுதி தேர்வாக இந்த பருவம் நாவலை வைத்துக்கொள்ள வேண்டும்.



இந்த நாவலை எழுதிய பைரப்பா அவர்கள் தனக்கென்று எந்த விதமான கட்டாயமும் வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் நல்லவர்கள் அவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் பாகுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. முழுமையான சுதந்திரத்தோடு இந்த நாவலை எழுதியுள்ளார்.



குறிப்பா ஒரு பத்து பதினைந்து கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய நினைவில் கதை நிகழ்வதுபோல எழுதியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு துளி விஷமாவது இருக்கும்  அந்த விஷம் தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பாரபட்சமில்லாமல் எழுதியிருக்கிறார்.



முதலில் ஒரு நான்கைந்து பக்கங்களை எதேச்சையாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஓரிடத்தில் துரியோதனின் பிறப்பு பற்றிய ஒரு கேள்வியும் ஆச்சரியப்படுத்தும் பதிலும் வருகிறது அங்கு ஆரம்பிக்கும் சுவாரசியம் புத்தகத்தின் இறுதிப் பக்கம் வரை தொடர்கிறது. பலவிதமான மகாபாரத கதைகளை படித்திருந்தாலும் பைரப்பா அவர்கள் அவருடைய கதாபாத்திரங்களின் வாயிலாக எழுப்பும் கேள்விகள் நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு புதுவிதமான மகாபாரத கதை என்பதை உணர்த்துகிறது.



கதையில் ஆழத்திற்கு செல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு விளையாடி இருக்கிறார். போர் காட்சிகள் உட்பட எதுவுமே விரிவாக எழுதப்படவில்லை. நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் விளைவாக அந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார். புத்தகப் பிரியர்கள் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.



பைரப்பா அவர்கள் எழுதிய நாவலுக்கு முன்பாக படிக்க வேண்டிய நாவல் இது. காரணம் பருவம் போன்ற ஒரு உச்சகட்டமான நாவலை வாசித்த பிறகு மற்ற நாவல்களை வாசிக்கையில் தானாகவே சுவாரசியம் குறைந்துவிடும். இந்த நாவலும் பருவம் போன்ற ஒரு முக்கியமான நாவல்தான் ஆனால் பருவம் நாவலை வாசித்துவிட்டு இந்த நாவலை வாசிக்கும்போது  பெரும்பாலான விஷயங்கள் சுவாரசியம் இல்லாமல் போய்விடுகிறது எனவே பருவம் நாவலுக்கு முன்பாக இதை வாசிக்க வேண்டும்.
பைரப்பா அவர்கள் எந்த வித கட்டாயமும் இல்லாமல் எழுதியதால் அவரால் நாவலில் தொடக்கத்திலேயே உச்சகட்டமான ஒரு உணர்வு எழுச்சியுடன் எழுத முடிந்தது. ஆனால் இந்த அஜயா நாவலின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே தன்னுடைய நோக்கத்தை சொல்லிவிடுகிறார் இது துரியோதனனை கதாநாயகனாககொண்ட நாவல். எனவே எதனால் நான் துரியோதனனை நல்லவனாக காட்டுகிறேன் என்று ஆசிரியர் நமக்கு விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார். அந்த கட்டாயத்தினால் ஒவ்வொரு விஷயமாக விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. எனவே எடுத்த உடனேயே கதை பரபரப்பாக நகராமல் மெதுவாகவே நகர்கிறது.
மகாபாரதத்தின் மையக் கதையை தொடாமல் ஏகலைவன், ஜரா, கர்ணன், துரியோதனன் போன்ற நான்கு கதாபாத்திரங்கள் எவ்வாறு தன்னை வடிவமைத்துக் கொண்டன என்பதை மட்டுமே இந்த நாவலில் விளக்கியிருக்கிறார். இந்த நாவல் மகாபாரதக் கதையின் மையத்தை தொடும்போது முடிந்துவிடுகிறது. எனவே முக்கியமான கதை என்பது இரண்டாவது பகுதியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் துரியோதனனை நல்லவனாக சித்தரித்து ஆசிரியர் எழுதும்போது தான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு கட்டுப்பட்டு எழுதுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மெல்ல மெல்ல அந்த எண்ணம் மாறி விடுகிறது ஆசிரியர் சொன்ன விஷயத்தை எடுத்துக் கொண்டு மற்ற மகாபாரதக் கதைகளில் துரியோதனன் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான் என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆசிரியர் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது மேலும் ஜெயமோகன் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசில் சகுனி ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் சூழ்ச்சி செய்ய பயன்படுத்தி கொண்டவராக காட்டப்படவில்லை ஆனால் இதில் கிருஷ்ணனும் சகுனியும் மிகத் தேர்ந்த அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் கிடைக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களுடைய சூழ்ச்சிக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரங்களை தவிர்த்தது என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் அஸ்வத்தாமன்தான். அவன் எப்பொழுதும் துரியோதனனுடன் இருந்துகொண்டு ஒவ்வொரு சூழ்நிலையையும் விளையாட்டாக சிரித்துக்கொண்டே கருத்து சொல்லிக் கொண்டே வருவது நம் அருகே ஒரு நண்பன் அமர்ந்து நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வை தருகிறது. இந்த புத்தகத்தில் அஸ்வத்தாமனுக்கு  முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் புத்தகத்தை படித்து முடித்ததும் அவன் நினைவில் தங்கி இருக்கிறான்.

முதல் பகுதியை பாகுபலி படத்தைப் போல சட்டென்று முடித்திருக்கிறார். யாதவர்களுக்கும் நிஷாதர்களுக்கும்  போர் தொடங்குகிறது, நீண்ட நாளைக்கு பிறகு விழித்துக்கொண்ட பரசுராமர் எங்கே கர்ணன் என்று கேட்க அவனைத் தேடும் படலம் தொடங்குகிறது, திரௌபதியை சபைக்கு அழைத்துச் செல்ல வந்தவனால் கதவு தட்டப்படுகிறது, இந்த மூன்று நிகழ்வுகளையும் சொல்லிவிட்டு நாவலை முடித்து விடுகிறார். எனவே இதன் இரண்டாம் பகுதியான கலி யுகத்தின் தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.