
சில வருடங்களுக்கு முன்பு என் வீட்டருகே கம்யூனிச கொள்கைகள், கம்யூனிச புரட்சியாளர்கள் குறிப்பாக லெனின் பற்றிய புத்தகங்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். புத்தகங்களை வாங்குவதற்கு யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. புத்தக்கத்தின் அளவைப்பார்த்து, இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கிறது ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை என யோசித்துக்கொண்டே இரண்டு புத்தகங்களை வாங்கினேன். அதை படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஏன் மற்றவர்கள் வாங்கவில்லை என்பது புரிந்தது. தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத தெரிந்திருந்தாலும் அந்த புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதற்கு காரணம் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விதம் அப்படி அமைந்திருக்கிறது. தமிழ் வார்த்தைகள்தான் அனால் அதற்கு பொருள் புரிந்து கொள்வதற்குள் அந்த புத்தகம் படிப்பதற்கான ஆர்வம் குறைந்துவிடுகிறது. எனவே ஒரு மொழி பெயர்ப்பு புத்தகத்தின் மீது ஆர்வம் அதிகரிப்பதும், அந்த புத்தகத்தை அலட்சியப்படுத்தப்படுவதும் மொழி பெயர்ப்பாளர்களின் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரை மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாதவாறு மொழிபெயர்ப்பது சிறப்பானதாக இருக்கும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் பத்ரி அவர்கள் எழுதிய கேண்டீட் புத்தகமும், உமர் என்ற புத்தகமும் படிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை படிக்கும்போதுதான் மொழி பெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை வரும் மற்றபடி கதையை பொருத்தவரையில் நேரடியான தமிழ் புத்தகத்தை படிப்பது போல ஒரே சீராக நீரோடை போல செல்லும். சரியாக முடிவெடுக்க என்ற இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை படிக்கும்போதே, நாம் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. புத்தகத்தில் வரும் பெயர்கள், உதாரணங்கள், சூழ்நிலை என அனைத்திலும் நமக்கு புரிபடாத விஷயங்களாகவும், பெயர்களாகவும் உள்ளன.
எடுத்த உடனே என்ன பிரச்சனை அதற்கு என்ன தீர்வு என்று ஆரம்பிக்காமல் மெல்ல மெல்ல ஒவ்வொரு நிலையாக எழுதியுள்ளார்கள். பகுதி 1-ல் முடிவு எடுக்க தேவையான உடல் நிலை மற்றும் மன நிலை குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள விசயங்கள் நம் நடைமுறை வாழ்வில் நாம் அறிந்ததுதான். ஆனாலும் நாம் பின்பற்றுவதில்லை அதை பின்பற்றுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், பின்பற்றாததனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றியும் அறிந்துகொள்ள இந்த பகுதி பயன்படும். தையல் மிஷின் கண்டுபிடித்தவரைப் பற்றி கூறியுள்ள விஷயம் மிகவும் உண்மையானது. ஒரு பிரச்சனையை தீவிரமாக யோசித்திவிட்டு தீர்வு கிடைக்காமல் சோர்ந்துபோய் தூங்கும்போது, விளையாடும்போது, அதாவது நம் மனம் தளர்வான நிலையில் இருக்கும் போது திடீரென நம் மனதில் குறிப்பிட்ட அந்த பிரச்சனைக்குறிய தீர்வு தோண்றும். இது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆசிரியரின் இது போன்ற விசயங்கள் முதல் பாகத்தில் எழுதியிருப்பதால் அடுத்த அத்தியாயங்களில் எந்த மாதிரி விசயங்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது.
இந்த புத்தகத்தை பொருத்தவரையில் முடிவெடுக்க தேவையான சூத்திரங்கள் என்று எதுவுமில்லை. முடிவெடுக்க தேவையான பண்புகளை என்னென்ன அதை எப்படி நாம் வளர்த்திக்கொள்வது என்பது தொடர்பான விசயங்கள் அதிகம் உள்ளன. அந்த பண்புகளை கண்டரிந்து வளர்த்திக்கொள்வது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனாலும் சில விசயங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயங்களாகவே உள்ளன. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் வரும் “குறைவாக தவறு செய்பவர்கள் குறைவாகவே கற்றுக்கொள்கிறார்கள்” இதை நாம் செயல்படுத்த விரும்பினாலும் நாம் சார்ந்துள்ள சமூகம் அதற்கு இடம் தராது என்றே நினைக்கிறேன். ஒரு முறை தவறு செய்தாலே இனி இவனை நம்பி எதுவும் கொடுக்க இயலாது என முடிவெடுத்துவிடுகிறார்கள். கற்றுக்கொள்வோம் என்ற முடிவில் அதிகம் தவறு செய்தால் சுத்தமாக நாம் மதிப்பிழந்து போய் விடுவோம். ஆனால் அந்த வாசகம் உண்மைதான் அதை செயல்படுத்துவதுதான் சிரமம். மற்றவர்கள் சாராத நம்முடைய சொந்த விசயங்களில் வேண்டுமானால் அதிக தவறுகளை செய்து அதிகமாக கற்றுக்கொள்ளலாம். அப்படியானால் நாம் தவறுகளில் இருந்து எப்படித்தான் கற்றுக்கொள்வது. அதற்கும் இந்த புத்தகத்திலேயே ஒரு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள முயற்சித்தால் மேற்கண்ட பிரச்சனை வரும் அதை தவிர்க்க அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள மற்றொரு வழிமுறையை சொல்லிக்கொடுக்கிறது இந்த புத்தகம் இது மிகவும் சுலபமான ஒரு முறைதான். மற்றவர்களின் அனுகுமுறைகளை கூர்ந்து கவணித்து அதில் நாம் கற்றுக்கொள்ள முயற்சித்தால் அந்த அனுபவங்கள் நிச்சயமாக நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தகத்தில் வரும் சில உதாரணங்கள் அப்படியே நம் வாழ்வில் நிகழ்ந்ததை விவரிப்பது போல உள்ளது. கொரில்லாவை பார்ப்பதைத்தவர விடாதிர்கள் என எழுதப்பட்டுள்ள பகுதியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நாம் ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருக்கும் போது மற்ற விசயங்களை கவணிப்பதில்லை. தீவிரமான யோசனையில் வண்டியில் செல்லும் போது எதிரில் வரும் தெரிந்தவர்களைக்கூட பார்க்காமல் சென்றுவிடுவோம். அதேபோல இல்லாத உருவங்களை பார்த்தல் தொடர்பான கட்டுரையும் அப்படியே நம் முட்டாள்தனத்தை பிரதிபளிப்பதாகவே உள்ளது. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமே என நாமாகவே முடிவெடுத்துக்கொண்டு பிரச்சனையை வளர்த்துக்கொண்டே செல்கிறோமே தவிர, உண்மை நிலவரம் என்ன என்பதை நாம் இறுதியாகத்தான் தெரிந்துகொள்கிறோம். இது போன்ற நம்முடைய சிறு சிறு அனுபவங்களை இந்த புத்தகத்தில் பல இடங்களில் உள்ளன.
புத்தகத்தில் உள்ள ஹெல்மெட் குறித்த சிந்தனை யாரும் யோசிக்காதது. இப்படியும் யோசிப்பார்களா என ஆச்சரியப்படவைத்தது. அரசியல் தலைவர்களில் இருந்து அடித்தட்டு மக்கள்வரை சரியாக முடிவெடுக்காததால் வாழ்க்கையையும், புகழையும் இழந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். எல்லா விதமாக விசயங்களையும் சரியாக செய்துவிட்டு அதன் பலனை அடையவேண்டிய இறுதியில் முடிவெடுக்கும் திறனில் பெரும்பாலோனோர் அடிவாங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி முடிவெடுக்க தேவையான உடல் நிலை, மன நிலை, ஆளுமைப் பண்புகளை வளர்த்திக்கொண்டால், தீர்க்கமாக முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் முடிவெடுத்துவிட்டால் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கு : URL http://nhm.in/shop/978-81-317-2963-2.html
3 comments:
பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துகள்.
நன்றி
Post a Comment