Sunday, February 7, 2010

இந்த புத்தகத்தில் படிப்பதற்கு என்ன இருக்கப்போகிறது! மாயாவதி பற்றி படித்து நாம் என்ன செய்யப்போகிறோம்! என்று நினைத்து இந்த புத்தகத்தை நீங்கள் படிக்காமல் விட்டு விட்டால், ஒரு விறுவிறுப்பான அரசியல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விடுவீர்கள். அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் ஒரு வசனம் சொல்வாரே “நாம முன்னேறனும்னா நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் ஏறி மிதித்துவிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே” இந்த புத்தகத்தின் கடைசியில் உள்ள சில அத்தியாயங்களை படிக்கும்போது நிஜ அரசியலும் அப்படித்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமில்லை இப்போதைய அரசியலில். காரியம் ஆக வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், யார் யாரிடம் பணிந்து போக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம் அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

ஒரு மிகச்சிறந்த சதுரங்க ஆட்டத்தை வேடிக்கைப்பார்த்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்குமோ, அவ்வளவு சுவாரசியமாக இந்த அரசியல் சதுரங்கத்தை பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். முதலில் வரும் நான்கு ஐந்து அத்தியாயங்கள் வழக்கமாக வரும் பிறப்பு, வளர்ப்பு பற்றியது. ஆனால் அதற்கு பின் அரசியல் ரீதியாக வரும் அத்தியாயங்கள் உண்மையிலேயே மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் செல்கிறது.

முன்னேறியவர்களின் வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விசயம் புரிகிறது. சிறுவயதில் அவர்களை முன்னேறத் தூண்டும் வகையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக அந்த சம்பவங்கள் நம் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் எங்கு வித்தியாசம் ஏற்படுகிறது என்றால், அந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் செயல் முறையையே மாற்றிக்கொண்டு விடுகிறார்கள். அதை ஒரு முக்கியமான நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த நிகழ்வுகளை ஒரு சிறு பிரச்சனை என்ற அளவிலேயே அனுகி அதை அத்தோடு மறந்துவிடுகிறார்கள். மாயாவதியின் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன ஆனால் அவை அனைத்து தலித்துகளின் வாழ்வில் நிகழ்ந்தவைதான். அந்த நிகழ்வுகளை மாயாவதி எப்படி அனுகியிருக்கிறார், அந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றியிருக்கிறார் என்பதுதான் அவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சிலருக்கு முன்னேறுவதற்கான அனைத்து விசயங்களும் சரியாக அமைந்தாலும் அவர்களை வழி நடத்த சரியான ஆள் இல்லாமல் தோல்வியடைந்துவிடுவார்கள். மாயாவதிக்கு அப்படியொரு நிகழ்வு நிகழவில்லை, காரணம் கன்ஷிராம் என்றோரு அருமையான குரு மாயாவதிக்கு அமைந்திருக்கிறார். பொதுவாக அரசியலில் வாரிசு போல இருப்பவர்கள், தங்களுடைய குருவை ஏதாவது ஒரு வகையில் மிஞ்சி விடுவார்கள். வளர்ந்த பிறகு திடிரென்று கட்சி மாறிவிடுவது அல்லது புதியதாக கட்சி ஆரம்பித்து தனக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவரின் காலை வாரி விடுவது வழக்கம். ஆனால் கன்ஷிராம் விசயத்தில் அப்படி நடக்காததற்கு மாயாவதி மிக நல்லவர் என்று அர்த்தமில்லை, பிரம்மிக்க வைக்கும் கன்ஷிராமின் திட்டமிடல்தான் கடைசிவரை அவர் நிலை தடுமாறாமல் அரசியலில் இருக்க காரணமாக அமைந்திருக்கிறது. அவரை புரிந்துகொள்ள அவர் சொன்ன ஒரு வாக்கியமே போது “என் கனவுகள் மிகப் பெரியவை” .

தமிழ் நாட்டு அரசியலே பெரிய தலைவலியாக நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரம் படிக்கும்போது நம்ம ஊர் அரசியல் பதட்டமெல்லாம் சாதாரண விசயம் என்று புரிகிறது. மாயாவதியை கன்ஷிராம் சந்தித்தது முதல் அவர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை படிக்கும் போது, இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே! ஏதாவது பிரச்சனையை உருவாக்குவார்களே! என சிந்தித்துக்கொண்டு படிக்கும்போதே அடுத்த அத்தியாயங்களில் வந்து விடுகிறது வழக்கமான பிரச்சனைகள். மாயாவதிக்கும் கன்ஷிராமுக்கும் உள்ள உறவு பற்றிய விமர்சனங்கள்... ஊர் மாறினாலும், அரசியல் மாறினாலும் மக்களின் பொதுவான சிந்தனை மாறாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

”கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தனக்கு சிலை வைக்கிறார் மாயாவதி” என்ற செய்தியை படித்ததும், இப்போதுள்ள அரசியல்வாதிகளை தட்டிக்கேட்க ஆள் இல்லை எனவே அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அப்படி நடந்துகொண்டாலும் இந்த மக்களெல்லாம் அவர்களுக்குத்தானே ஓட்டு போடுகிறார்கள் – என்ற சிந்தனை நம் மனதில் எழுவது இயல்பு. இப்படி யோசிக்கும் நாம் மாயாவதியை பற்றி ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறோமா! என்று யோசித்தால் அந்த கேள்விக்கு நம்மிடம் பதில் இருக்காது. மாயாவதியை பற்றி மட்டுமல்ல இந்தியாவில் தற்போதுள்ள எந்த அரசியல்வாதியை பற்றியும் முழுமையாக நமக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அப்படி அவர்களை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொண்டால், அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டால், அவர்களின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வோமா! அல்லது இப்போதுள்ள அளவிற்கு கடுமையான விமர்சனங்கள் இருக்குமா! என்றால் அதில் சந்தேகமே. மாயாவதி புத்தகத்தை படித்ததும் எனக்கு அப்படித்தான் தோண்றுகிறது.

அரசியலை பொருத்த வரையில் எங்கு எது நடந்தாலும் அனைத்து அரசியல்வாதிகளையும் அந்த விசயம் பாதிக்கும் என்பதை மாயாவதியின் வாழ்க்கையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பாபர் மசூதி போன்ற விசயங்கள் மாயாவதியின் வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதும்போது அவரைப் பற்றிய தவறான விசயங்கள் நாசுக்காக சொல்லப்பட்டு, நல்ல விசயங்கள் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் மாயாவதியின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விசயங்களை ஆசிரியர் சம அளவில் வெளிப்படையாக எழுதியிருப்பது பாரட்டத்தக்கது.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மாயாவதியை பற்றி மட்டுமல்ல மற்ற அனைத்து அரசியல்வாதிகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. வெறுமனே அவர்களை பற்றி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருக்காமல், அவர்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு விமர்சனம் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு செல்லுங்கள் URL: http://nhm.in/shop/978-81-8493-185-3.html

Monday, December 14, 2009

சிப்பாய் புரட்சி பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எந்தவித யோசனையும் செய்யாமல் துணிந்து வாங்கலாம் இந்த புத்தகத்தை. ஒவ்வொரு பக்கத்திலும் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்ட இந்த புத்தகத்தை குழப்பம் இல்லாமல் எழுதிய ஆசிரியர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே.

அவனுக்கென்ன ராஜ வாழ்க்கை என்று நாம் பேசிக்கொள்வது வழக்கம். உதவித்தொகை வாங்கி பிழைப்பு நடத்தும் இந்த காலத்து முதியவர்கள் போல அந்த காலத்து ராஜாக்கள் ஆங்கிலேயரிடம் இந்த மாதம் இவ்வளவு தொகை எங்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை என கெஞ்சி கேட்டு பிழைப்பு நடத்தியதை இந்த புத்தகத்தில் படித்த பிறகு ராஜ வாழ்க்கையின் உண்மை நிலை புரிகிறது.

சில நிறுவனங்களில் பணியாளர்களிடம் அனைத்து பொருப்புகளையும் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு வருகிறது என்பதில் மட்டுமே முதலாளிகள் கவணம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். சில வருடங்கள் கழித்து அந்த பணியாளன் யோசித்துப்பார்ப்பான். நான் தான் வேலை செய்கிறேன், எனக்குதான் அனைத்து விசயங்களும் தெரிகிறது, பணம் மட்டும் முதலாளிக்கு போகிறது! இந்த தொழிலை ஏன் நான் தனியாக செய்யக்கூடாது என்று யோசித்து அந்த முதலாளியிடமிருந்து விலகிச்சென்றுவிடுவான். அதற்குப்பிறகு அந்த முதலாளி தன்னுடைய ஊழியன் இப்படி துரோம் செய்துவிட்டானே என புலம்பத்தொடங்குவார். அப்படித்தான் நடந்துள்ளது ஆங்கியேலர் நம் மண்ணை ஆக்கிரமித்தது. ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் அத்துமீறி ஆதிக்கம் செலுத்தியதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் நாம் அப்போதிருந்த சூழ்நிலையைப்பற்றி பேசுவதில்லை. நாம் பேசாமல் விட்ட அந்த விசயத்தை இந்த புத்தகம் பேசுகிறது. வாகணத்தை பூட்டாமல் சாலையோரம் நிருத்திவிட்டு காணாமல் போய்விட்டதென்று சிலர் பொருப்பில்லாமல் புலம்புவார்களே அவர்களைப்போல்தான் நம் நாட்டைச்சார்ந்த மன்னர்கள் செயல்பட்டுள்ளார்கள். வரும் மாணியத்தை வாங்கிக்கொண்டு சோம்பேரித்தனமாக எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்தாமல் சுக வாழ்க்கையில் மட்டுமெ கவணம் செலுத்தியுள்ளார்கள் நம் மன்னர்கள். பாதுகாப்பு வேண்டுமா ஆங்கிலேயனை கூப்பிடு, அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா வரி வசூல் செய்துகொள்ளச்சொல் என்பதையே வழக்கமாக கொண்டிருந்தவர்களிடம் யாராக இருந்தாலும் அத்துமீறியிருப்பார்கள் என்பதுதான் உண்மை.

சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது, வரலாறு புத்தகத்தில் படித்த ஒருசிலரின் வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் வழிநடத்திச்செல்ல புத்தகத்தில் யாராவது ஒருவர் முன்னிலை படுத்தப்படுவது வழக்கம். இந்த புத்தகத்தில் அப்படியாரும் இல்லை. இது மங்கள்பாண்டே பற்றியா புத்தகமா! என ஆச்சரியத்துடன் படித்தால் அவரது சாகாப்தம் இரண்டு மூன்று பக்கங்களோடு முற்றுப்பெருகிறது. ஒரு வேலை ஜான்சி ராணி பற்றிய புத்தகமாக இருக்குமோ! என நினைத்தால் அவரும் அப்படியே. வேறு யார்தான் புத்தகத்தில் முன்னிலை படுத்தப்பட்டிருக்கிறார்க்ள்????? புரட்சி. ஆம் புரட்சிதான் இந்த புத்தகத்தை வழிநடத்துகிறது. முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை போராளிகள் வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் அவர்களின் மூலமாக புரட்சி மட்டும் ஏந்திய தீபமாக கொண்டு செல்லப்படுகிறது.

கட்டபொம்மன், புலித்தேவன் போன்றோர்கள் வெள்ளையர்களுடன் மோதியது அவர்களது சொந்தப்பிரச்சனைதானே அதெப்படி சுதந்திரப்போராகும் என்று சுதந்திரம் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் தோண்றும். அந்த விசயத்தை ஆசிரியர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு அவற்றை ஏன் சுதந்திரப்போராக எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளது சிறப்பு.

திருவாளர் பாம்பு அவர்களே என்று மரியாதையாக அழைத்தாலும் பாம்பு நம்மை கடிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அந்த காலத்து ராஜாக்கள் அறிந்திருக்கவில்லைபோலும். அநியாயத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளார்கள். ஒரு புறம் நீங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள் எங்களுக்கு கஞ்சி போதும் என சிப்பாய்களாக இருந்த நம் மக்கள் கூறுகிறார்கள் என்றால் மறுபுறம் தான் சேமித்த பணத்தை ஆங்கிலேயருக்கே கொடுத்து உதவியிருக்கிறார் ஒரு ராஜா. அளவுக்கு மீறிய விசுவாசம், மரியாதை செலுத்த காரணம் என்ன? சிறு சிறு நாடுகள் ஒன்றின் மீது மற்றொன்றுக்கு பொறாமை, போட்டி, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் முயற்சி ஆகியவற்றிற்கு ஆங்கிலேயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் முடிவு இரண்டு கரடிகளுகு பிரச்சனையை தீர்த்துவைக்க வந்த குரங்கு கதைபோல் ஆகிவிட்டது.

ஆங்கிலேயர், இந்தியர் என்ற சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி ஒருவர் நம்மை கவர்கிறார். அவர் கிளைவ். இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு பிறகு போரிலாவது தன் உயிர் போகட்டும் என ரானுவத்தில் சேர்ந்தவராம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தொழில் நுட்பத்துறை பிரபலமாக இருந்ததில்லையா அதுபோல அந்த காலத்தில் ஆங்கிலேயரின் ரானுவத்தில் பணியாற்றுவது மிகவும் விரும்பத்தக்க ஒரு தொழிலாகவும், பிரபலமான ஒரு தொழிலாகவும் கருதப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தகப்பன் மகன் பேரன் என ஆங்கிலப்படையில் பணியாற்றுவதை சந்தோஷமாக கருதியிருக்கிறார்கள். வரலாற்றில் ஒரு அழிவு ஏற்படுகிறது என்றாலே பெரும்பாலும் அங்கே ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். இங்கேயும் இருக்கிறார்கள். ஆங்கிலேயரின் மனைவிமார்கள் வடிவில். ஆசையாக பணிக்கு சென்ற நம்மவர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் முதல் பிரிவு ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறார்கள் ஆங்கிலேயரின் மனைவிகள்.

நம் நாட்டில் தற்போது நடக்கும் சில பிரச்சனைகள் படிக்கும் போது பயங்கரமாக இருக்கும். ஆந்திராவில் பிரச்சனை தமிழகத்தில் பிரச்சனை என படிக்கும்போது பெரிய பிரச்சனையாக தெரிகிறது. ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, அட இவ்வளவு காலம் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமே என்ற ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. இந்து முஸ்லீம் பிரச்சனை, சீக்கியர் முஸ்லீம் பிரச்சனை என ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டிருந்ததை படிக்கும்போது. இப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றே தாராளமாக கருதலாம்.

புரட்சியில் நிகழ்ந்த வன்முறைக்காட்சிகளை ஆங்கிலப்படத்தில் பார்ப்பதுபோல அப்படியே விவரித்துள்ளார் ஆசிரியர். ஒரு வீட்டுக்குள் வைத்து கசாப்புக்காரர்களால் பெண்கள், குழந்தைகள் வெட்டி சாய்ப்பதாகட்டும், ஆங்கிலேயர்களை படகில் ஏற்றி வழியனுப்பிவிட்டு தப்பித்த ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்து ஆற்றின் நிறத்தையே மாற்றியதாகட்டும், ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்முன் நிருத்துகிறார் ஆசிரியர்.

காந்தியம் என்பது வறட்டு சித்தாந்தமில்லை என தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, இந்த புத்தகத்தை படித்ததும் புரிகிறது. ஒரு புரட்சியாளர், அவர் உருவாக்கிய படை, தேவையான ஆயுதங்கள் அவ்வளவுதான். ஒவ்வொருவரும் இதைக்கொண்டே போராடுகிறார்கள். ஒவ்வொரு போராட்டம் முடிந்ததும் ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது அனைவரிடமும் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” அது யாருக்கும் தெரியவில்லை. ஆட்களும் ஆயுதங்களும் போதும் என நினைத்ததால் ஒரு நூற்றாண்டு காலம் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. அஹிம்சை என்றொரு காந்திய சிந்தனை தோண்றாமல் மீண்டும் புரட்சியாளர்கள், ஆயுதம் என நம் சிந்தனை சென்றிருந்தால் இன்னும் ஓர் நூற்றாண்டு நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். நல்ல வேலை நம் ஆயுதம் அஹிம்சையாக மாறியது. சிறப்பான இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் URL: http://nhm.in/shop/978-81-8493-116-7.html


Monday, December 7, 2009

சில புத்தகங்களை படிக்கும்போது லிப்டில் ஏறியது போன்ற அனுபவம் கிடைக்கும். அதாவது முதல் பக்கத்தை படித்ததும் நம்மை கடைசி பக்கத்திற்கு நம்மை அறியாமலேயே அழைத்துச் சென்றுவிடும். சில புத்தகங்கள் படிக்கட்டில் ஏறுவது போன்ற அனுபவத்தை தரும். அதாவது ஒவ்வொரு பக்கமாக கஷ்டப்பட்டு நாமாக நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கும். அதிகமாக மொழி பெயர்ப்பு புத்தகங்களை படிக்கும்போதுதான் படி ஏறுவது போன்ற அனுபவம் கிடைக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு என் வீட்டருகே கம்யூனிச கொள்கைகள், கம்யூனிச புரட்சியாளர்கள் குறிப்பாக லெனின் பற்றிய புத்தகங்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். புத்தகங்களை வாங்குவதற்கு யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. புத்தக்கத்தின் அளவைப்பார்த்து, இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கிறது ஏன் யாரும் ஆர்வம் காட்டவில்லை என யோசித்துக்கொண்டே இரண்டு புத்தகங்களை வாங்கினேன். அதை படிக்க ஆரம்பித்த பிறகுதான் ஏன் மற்றவர்கள் வாங்கவில்லை என்பது புரிந்தது. தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத தெரிந்திருந்தாலும் அந்த புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதற்கு காரணம் அந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விதம் அப்படி அமைந்திருக்கிறது. தமிழ் வார்த்தைகள்தான் அனால் அதற்கு பொருள் புரிந்து கொள்வதற்குள் அந்த புத்தகம் படிப்பதற்கான ஆர்வம் குறைந்துவிடுகிறது. எனவே ஒரு மொழி பெயர்ப்பு புத்தகத்தின் மீது ஆர்வம் அதிகரிப்பதும், அந்த புத்தகத்தை அலட்சியப்படுத்தப்படுவதும் மொழி பெயர்ப்பாளர்களின் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரை மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாதவாறு மொழிபெயர்ப்பது சிறப்பானதாக இருக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு முன் பத்ரி அவர்கள் எழுதிய கேண்டீட் புத்தகமும், உமர் என்ற புத்தகமும் படிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை படிக்கும்போதுதான் மொழி பெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை வரும் மற்றபடி கதையை பொருத்தவரையில் நேரடியான தமிழ் புத்தகத்தை படிப்பது போல ஒரே சீராக நீரோடை போல செல்லும். சரியாக முடிவெடுக்க என்ற இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை படிக்கும்போதே, நாம் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. புத்தகத்தில் வரும் பெயர்கள், உதாரணங்கள், சூழ்நிலை என அனைத்திலும் நமக்கு புரிபடாத விஷயங்களாகவும், பெயர்களாகவும் உள்ளன.

எடுத்த உடனே என்ன பிரச்சனை அதற்கு என்ன தீர்வு என்று ஆரம்பிக்காமல் மெல்ல மெல்ல ஒவ்வொரு நிலையாக எழுதியுள்ளார்கள். பகுதி 1-ல் முடிவு எடுக்க தேவையான உடல் நிலை மற்றும் மன நிலை குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள விசயங்கள் நம் நடைமுறை வாழ்வில் நாம் அறிந்ததுதான். ஆனாலும் நாம் பின்பற்றுவதில்லை அதை பின்பற்றுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், பின்பற்றாததனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றியும் அறிந்துகொள்ள இந்த பகுதி பயன்படும். தையல் மிஷின் கண்டுபிடித்தவரைப் பற்றி கூறியுள்ள விஷயம் மிகவும் உண்மையானது. ஒரு பிரச்சனையை தீவிரமாக யோசித்திவிட்டு தீர்வு கிடைக்காமல் சோர்ந்துபோய் தூங்கும்போது, விளையாடும்போது, அதாவது நம் மனம் தளர்வான நிலையில் இருக்கும் போது திடீரென நம் மனதில் குறிப்பிட்ட அந்த பிரச்சனைக்குறிய தீர்வு தோண்றும். இது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆசிரியரின் இது போன்ற விசயங்கள் முதல் பாகத்தில் எழுதியிருப்பதால் அடுத்த அத்தியாயங்களில் எந்த மாதிரி விசயங்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது.

இந்த புத்தகத்தை பொருத்தவரையில் முடிவெடுக்க தேவையான சூத்திரங்கள் என்று எதுவுமில்லை. முடிவெடுக்க தேவையான பண்புகளை என்னென்ன அதை எப்படி நாம் வளர்த்திக்கொள்வது என்பது தொடர்பான விசயங்கள் அதிகம் உள்ளன. அந்த பண்புகளை கண்டரிந்து வளர்த்திக்கொள்வது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனாலும் சில விசயங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயங்களாகவே உள்ளன. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் வரும் “குறைவாக தவறு செய்பவர்கள் குறைவாகவே கற்றுக்கொள்கிறார்கள்” இதை நாம் செயல்படுத்த விரும்பினாலும் நாம் சார்ந்துள்ள சமூகம் அதற்கு இடம் தராது என்றே நினைக்கிறேன். ஒரு முறை தவறு செய்தாலே இனி இவனை நம்பி எதுவும் கொடுக்க இயலாது என முடிவெடுத்துவிடுகிறார்கள். கற்றுக்கொள்வோம் என்ற முடிவில் அதிகம் தவறு செய்தால் சுத்தமாக நாம் மதிப்பிழந்து போய் விடுவோம். ஆனால் அந்த வாசகம் உண்மைதான் அதை செயல்படுத்துவதுதான் சிரமம். மற்றவர்கள் சாராத நம்முடைய சொந்த விசயங்களில் வேண்டுமானால் அதிக தவறுகளை செய்து அதிகமாக கற்றுக்கொள்ளலாம். அப்படியானால் நாம் தவறுகளில் இருந்து எப்படித்தான் கற்றுக்கொள்வது. அதற்கும் இந்த புத்தகத்திலேயே ஒரு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள முயற்சித்தால் மேற்கண்ட பிரச்சனை வரும் அதை தவிர்க்க அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள மற்றொரு வழிமுறையை சொல்லிக்கொடுக்கிறது இந்த புத்தகம் இது மிகவும் சுலபமான ஒரு முறைதான். மற்றவர்களின் அனுகுமுறைகளை கூர்ந்து கவணித்து அதில் நாம் கற்றுக்கொள்ள முயற்சித்தால் அந்த அனுபவங்கள் நிச்சயமாக நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தகத்தில் வரும் சில உதாரணங்கள் அப்படியே நம் வாழ்வில் நிகழ்ந்ததை விவரிப்பது போல உள்ளது. கொரில்லாவை பார்ப்பதைத்தவர விடாதிர்கள் என எழுதப்பட்டுள்ள பகுதியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். நாம் ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருக்கும் போது மற்ற விசயங்களை கவணிப்பதில்லை. தீவிரமான யோசனையில் வண்டியில் செல்லும் போது எதிரில் வரும் தெரிந்தவர்களைக்கூட பார்க்காமல் சென்றுவிடுவோம். அதேபோல இல்லாத உருவங்களை பார்த்தல் தொடர்பான கட்டுரையும் அப்படியே நம் முட்டாள்தனத்தை பிரதிபளிப்பதாகவே உள்ளது. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமே என நாமாகவே முடிவெடுத்துக்கொண்டு பிரச்சனையை வளர்த்துக்கொண்டே செல்கிறோமே தவிர, உண்மை நிலவரம் என்ன என்பதை நாம் இறுதியாகத்தான் தெரிந்துகொள்கிறோம். இது போன்ற நம்முடைய சிறு சிறு அனுபவங்களை இந்த புத்தகத்தில் பல இடங்களில் உள்ளன.

புத்தகத்தில் உள்ள ஹெல்மெட் குறித்த சிந்தனை யாரும் யோசிக்காதது. இப்படியும் யோசிப்பார்களா என ஆச்சரியப்படவைத்தது. அரசியல் தலைவர்களில் இருந்து அடித்தட்டு மக்கள்வரை சரியாக முடிவெடுக்காததால் வாழ்க்கையையும், புகழையும் இழந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். எல்லா விதமாக விசயங்களையும் சரியாக செய்துவிட்டு அதன் பலனை அடையவேண்டிய இறுதியில் முடிவெடுக்கும் திறனில் பெரும்பாலோனோர் அடிவாங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி முடிவெடுக்க தேவையான உடல் நிலை, மன நிலை, ஆளுமைப் பண்புகளை வளர்த்திக்கொண்டால், தீர்க்கமாக முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் முடிவெடுத்துவிட்டால் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கு : URL http://nhm.in/shop/978-81-317-2963-2.html

Tuesday, November 17, 2009

சில கதாநாயகர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது, பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் படம் துவங்கும், பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் சண்டைக்காட்சி முடிந்தது அந்த கதாநாயகன் தூங்கிக்கொண்டிருப்பார் அவர் கணவில் நடந்த சண்டைக்காட்சியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். படத்திற்கும் அந்த சண்டைக்காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஒரு பரபரப்பை உண்டுபன்னுவதற்காக அந்த காட்சியை சேர்த்திருப்பார்கள். சினிமா நடிகர் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதாலோ என்னவோ இந்த புத்தகம் எழுதியதிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாயத்தையே சினிமா மாதிரியான மிகைப்படுத்தலுக்காக ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

விஜயகாந்தின் புத்தகம் வீட்டிற்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்வி “விஜயகாந்திற்கு புத்தகமா, புத்தகம் போடும் அளவுக்கு விஜயகாந்த் வந்துவிட்டாரா???” புத்தக விசயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்தைப்பற்றி பல ஆச்சரியமான கேள்விகள் எழுவதுண்டு. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிதர்சனமான உண்மை விஜயகாந்தின் வளர்ச்சி.

விஜயகாந்தின் முந்தைய வாழ்க்கை முறைகளை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அவருடைய தற்போதைய விபரங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது அதிகமான விசயங்கள் அவர்கள் அறிந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவையாகும் சமீபகாலத்தில் நடந்தவைகள்.

சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்த விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனம் பேச முடிகிறதென்றால், அதற்கான சூழ்நிலையும், பேச வேண்டிய அவசியமுள்ள தொழில் அவருக்கு அமைந்ததும் காரணமாக சொல்ல முடியும். இதை படிக்கும் போது வளர்ச்சியை விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ள அதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆங்கிலம் பேச விரும்புபவர்கள், ஆங்கலம் பேசும் மக்களிடம் பழக வேண்டும் என்பார்கள். ஆங்கிலம் பேச வாய்ப்பு இல்லாத நிலையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆங்கிலம் பேசுவது சிரமமாகத்தான் இருக்கும் என்பார்கள். இந்த கூற்று உண்மைதான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தகத்தை படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயங்கள் உண்டு. அதில் முக்கியமானவை விஜயகாந்தின் ஆரம்ப கால காதல். ஜன்னலோரம் எட்டிப்பார்ப்பது, கண்களால் பேசிக்கொள்வது, காதலின் கட்டளைக்கு ஏற்ப மாற்றமடைவது என சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல படங்களை ஓட்டியிருக்கிறார் விஜயகாந்த். அந்த படமும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அதற்குப்பிறகும் இரண்டு காதல் படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அவற்றின் விபரங்கள் இல்லையாம். நம்மை அறியாமலேயே நாம் சிரிக்கும் பக்கங்கள் இவை.

நம்ம ஊருக்கு தொடர்பில்லாத நபர்களின் வாழ்க்கை முறை பற்றி படிக்கும் போது, அவர்களின் சிறு வயது வாழ்க்கை முறை நமக்கு தொடர்பில்லாததாக இருக்கும். மற்றொருவரின் வாழ்க்கையை படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் விஜயகாந்த் நம்மைப்போன்ற சராசரி மனிதர் என்பதால் அவருடைய சிறு வயது வாழ்க்கையை படிக்கும்போது அட! இவரும் நம்மைப்போன்ற ஆள்தானா! என்ற ஆச்சரிய்ம் ஏற்படுகிறது. கில்லி விளையாடுவது, பள்ளிக்கூடம் செல்லாமல் கோலி விளையாடுவது, காத்தாடி விடுவது, பல்பம் மிட்டாயை சிகரெட் பிடிப்பது போல வாயில் வைத்துக்கொண்டு விளையாடுவது என அத்தனையும் சராசரி வாசகர்களின் சிறுவயதில் நிகழ்திருப்பதால் இவற்றை படிக்கும் போது அவர்களின் முகத்தில் மெல்லிய புன்னைகை பூப்பது நிச்சயம்.

சினிமாவில் கூட நடக்காத ஒரு அதிசயம் விஜயகாந்த் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அது அவருக்கு கிடைத்த இரண்டாவது அம்மாவும் அன்பானவராக அமைந்தது. இரண்டாவதாக வந்த அம்மாவின் குணம் சற்று எதிர்மறையானதாக அமைந்திருந்தால் விஜயகாந்தின் வாழ்க்கையில் திரைக்கதை வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவரும் பெற்ற தாயைப்போல அன்பு செலுத்தியிருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு இது கூட ஒரு முக்கியமாக காரணம் என்று சொல்லலாம்.

நம்மை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விசயம் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நட்பு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேட்டியில் இதோ இவன் என் நன்பன் எங்களுக்குள் எந்தவித மதரீதியான பாகுபாடும் கிடையாது என சொல்லியிருந்தார். சரி சினிமா ரீதியான நட்பு என நினைத்திருந்தேன் ஆனால் படிக்கிற காலத்தில் இருந்து, சினிமா துறைக்கு வந்து கஷ்டப்படும்போது ஒன்றாக கஷ்டப்பட்டு, இன்று வரை நன்பர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விசயம்தான்.

ஒரு சினிமா நடிகன் அரசியலுக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனத்தின் மூலம் விஜயகாந்தின் அரசியில் வாழ்க்கை நேற்று ஆரம்பித்தது போன்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அவரது சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியில் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா மூலமாக, அரசியல் சிந்தனைகளும், மக்கள் தொடர்பு சிந்தனைகளும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது.

விஜயகாந்திடம் பிடித்தமான விசயம் அவருடைய துணிவு மற்றும் தீர்க்கமான முடிவுகள். நான் வருவேன், வரமாட்டேன், வெளியில் இருப்பே, ஓரமா இருப்பேன் இந்த மாதிரி பேச்சு எங்கிட்ட கிடையாது ”நான் கண்டிப்பாக வருவேன்” என்று ஒரு படத்தில் தான் அரசியலுக்கு வருவது பற்றி வசனம் பேசுவார், அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளன. ஒவ்வொரு முறை அவருக்கு கிடைக்கும் வாக்கு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற கட்சிகளால் இதனால் தான் அவருக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது, அதனால்தான் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது என ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. அவர் வளர்ச்சிப்பாதையில் இருக்கிறார் என்ற நிதர்சனமான உண்மையை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை..

விஜயகாந்தை பற்றிய இந்த புத்தகம் கூட விஜயகாந்த் படம் பார்ப்பதுபோல்தான் இருக்கிறது. சண்டைக்காட்சிகள், சில காதல் காட்சிகள், ஆவேசமான போரட்டங்கள், அரசியல் கலம் என ஒரு விஜயகாந்த் படத்தை நம் கண்முன் நிருத்துகிறார். புத்தக்த்தில் அவ்வப்போது வரும் சண்டைக்காட்சிகளை ஆசிரியர். சினிமாவில் வரும் சண்டை போலவே விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த (URL) முகவரிக்கு செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-118-1.html

Wednesday, October 28, 2009

ஒருவர் சாதனை புரிந்ததும் கை தட்டிவிட்டு, கை குழுக்கிவிட்டு, சென்றுவிடாமல் அந்த சாதனையாளரின் வாழ்க்கையை பற்றிய விசயங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம். அப்படி அறிந்துகொள்வதன் மூலமாக நம்முடைய செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளை பற்றி கவலைப்படாமல் உத்வேகத்துடன் செயல்பட சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு உதவும். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பெற்றதற்காக தமிழ் திரையுலகினர் விழா எடுத்தபோது பேசிய நடிகர் பார்த்தீபன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியதன் மூலமாக நம்மாலும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார், உண்மையான வார்த்தைகள் அவை. திரை துறையினருக்கு மட்டுமல்லாது அனைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விசயங்கள் அவரது வாழ்க்கையில் இருப்பது தெரிகிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக ஒதுங்கிக் கொண்டாலும், அந்த புகழ் பெருவதற்குறிய அனைத்து பணிகளையும் நாமே செய்ய வேண்டும். ரஹ்மான் அவர்களுடைய செயல்பாடுகள் விளக்கும் விசயம் இதுதான். இதையேதான் அவருடைய அம்மாவும் அறிவுரையாக கூறியிருக்கிறார் “எப்பவும் இன்னொருத்தரை நம்பி நீ இருக்கக்கூடாதுப்பா, உன்னால தனியா என்ன என்ன செய்ய முடியும்ன்னு யோசி” தனது இசைப் பயணத்தை துவங்குவதற்கு முன்பாக அவருடைய தாயார் சொன்ன வார்த்தைகள் இவை. புத்தகத்தை படித்து முடித்ததும் இப்போதுவரை அந்த வார்த்தைகளை அவர் பின்பற்றி வந்திருப்பது தெரிகிறது.

சினிமாவில் சில சமயங்களில் கதாநாயகனைவீட சில காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் புகழப்படும் விதமாக அமைந்துவிடும் அது போல ரஹ்மான் அவர்களைப்பற்றிய புத்தகத்தை படித்து முடித்தது, ரஹ்மான் அவர்களைப் பற்றிய விசயங்கள் எதுவும் மனதில் தங்கவில்லை, மற்றொருவர் நம்மை ஆட்கொள்கிறார் அவர் ரஹ்மான் அவர்களுடைய தந்தை சேகர். இரண்டு மூன்று அத்தியாயங்களில் மட்டுமே இவரைப்பற்றிய விபரங்கள் இருந்தாலும் இவர் நம் மனதில் தங்கிவிடுகிறார். மிகக்கடுமையான உழைப்பாளியாக வாழ்ந்த அவரது வாழ்க்கையும் சோகமான அவருடைய இறப்பும் ஒரு தனி புத்தகம் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. புரிகிறதோ இல்லையோ குழந்தை பருவத்திலேயே இசையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று இசையையும், உலகையும் உணர்த்திய சேகர் போன்ற ஒருவர் தந்தையாக கிடைத்த பிறகு ரஹ்மான் ஆஸ்கார் வாங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். புத்தகத்தின் ஈரமான பக்கங்கள் இவை.

ஒன்பதாம் வகுப்பு வரை ஊதாரித்தனமாக சுற்ற விட்டு விட்டு பத்தாம் வகுப்பில் தன் மகன் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என விரும்பும் தந்தைகளுக்கு மத்தியில், சேகர் தன்னுடைய மகனை மிகத் தெளிவாக திட்டமிட்டு சிற்பமாக செதுக்கியுள்ளது தெரிகிறது. தன் மகன் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என கணவு கண்டு கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு சேகர் அவர்களுடைய நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருடைய செயல்களில் இருந்து எல்லா தகப்பன்களும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

புத்தகத்தை படிப்பதற்கு முன்பு வரை திடிரென்று ஒரு இளைஞர் இசைத்துறையில் பிரபலமாகிவிட்டார் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் புத்தகத்தை படித்து முடித்ததும்தான் புரிந்தது, நான்கு வயதிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், முயற்சியுமே அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. திடிரென்று அவர் மலை உச்சியில் தோண்றிவிடவில்லை ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கிறார். அவர் ஆஸ்கார் விருது வாங்கியதை கொண்டாடும் கூட்டத்திற்கு அவர் கடந்து வந்த வாழ்க்கை முறை மற்றும் அவருடைய முழுமையான உழைப்பு பற்றி தெரியவில்லை என்றே நினைக்கிறேன். தெரிந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருக்க மாட்டார்கள் ஏனேனில் அவரது உழைப்பிற்கு முன்பாக ஆஸ்கார் மிக சாதாரணமான ஒன்றே. நிச்சயமாக ஆஸ்கார் அவரது பயணத்தில் எல்லையாக இருக்காது. அதுவும் ஒரு தொடக்கமாகவே அமையும்.

நீங்களும் நானும் கண்டிப்பாக அந்த விளம்பரத்தை பார்த்திருப்போம் ஆனால் அவற்றை உருவாக்கியது திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தெரிந்திருக்காது என ஆசிரியர் ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். உண்மைதான் பல விசயங்கள் ரஹ்மானின் அடையாளங்கள் இல்லாமல் நம்மை கடந்து போயிருக்கிறது என்பது ரஹ்மான் பற்றிய புத்தம் படிக்கும்போதுதான் தெரிகிறது.

இளையராஜா பற்றிய விபரங்களை எழுதும்போது ஆசிரியர் நடுநிலமை கடைபிடிக்க முயற்சி செய்திருப்பார்போல் தெரிகிறது. இருவர் பற்றி எழுதும் போதும் ராஜாவின் ரசிகர்கள், ரஹ்மானின் ரசிகரகள் என்ற கண்னோட்டத்திலேயே எழுதியுள்ளார். அது அவசியமே இல்லை, இளையராஜாவை தாண்டி ரஹ்மான் சென்று விட்டார் என்று இனி வெளிப்படையாகவே சொல்லலாம். அதே போல் ரஹ்மான் இளையராஜாவிடம் பணியாற்றியவர் என்ற செய்திதான் பரவலாக தெரிந்திருந்தது ஆனால் இளையராஜா ரஹ்மானின் அப்பாவிடம் பணியாற்றியவர் என்ற விபரம் இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துகொண்டதும் ஆச்சரியமாக இருந்தது.

புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அந்த அத்தியாயம் சம்பந்தப்பட்ட தலைப்புகளையே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெய்வம் தந்த பூ, பூவுக்கென்ன பூட்டு, ஓர் அழகைக் கண்டேனே போன்ற தலைப்புகள் கவித்துவமாக இருந்தாலும் தனிமைப்பட்டு நிற்பதாகவே தெரிகிறது.

சிறிய புத்தகம் என்றாலும் ரஹ்மானைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவருடைய சிறுவயதிலிருந்து படிப்படியாக அவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியுள்ளார். விளையாட்டுத்தனமாக ஒரு ஆர்வத்தில் இசை பயின்றது பின்னர் அதுவே வாழ்க்கையாகிப் போனது, குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டது, நண்பர்களுடன் சேர்ந்து இசை குழு ஆரம்பித்தது, இசை தொடர்பாக படித்தது என ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் செயல் முறைகளாக நிறைந்து கிடைக்கிறது. அவருடைய பழக்க வழக்கங்கள் பல அவருடைய சிறு வயதிலிருந்தே பின்பற்றி வந்திருக்கிறார் என்பது தெரிகிறது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர் இரவில் பணியாற்றும் பழக்கத்தை சொல்லலாம்.

உலக தலைவர்கள், உலக சாதனையாளர்கள் என நமக்கு பரிச்சயமில்லாத நபர்களைப் பற்றி படிக்க ஆர்வம் செலுத்தம் நாம், நம் அருகில் இருக்கும் சாதனையாளரான ரஹ்மான் அவர்களைப் பற்றியும் படிக்க வேண்டியது அவசியம். முன்னேற நினைப்பவர்களுக்கு உதவும் நூலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க இந்த முகவரிக்கு (URL) செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

Saturday, August 8, 2009

”என் ஜன்னலுக்கு வெளியே” தலைப்புக்கு ஏற்றமாதிரிதான் புத்தகமும் அமைந்துள்ளது. ஜன்னலோரம் உட்கார்ந்து நாம் வீதியை பார்ப்பதுபோல், ரசிப்பதுபோல், மாலன் அவர்கள் சமுதாயத்தை பார்த்துள்ளார், ரசித்துள்ளார். சமுதாயத்தில் நாம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜன்னலுக்கு வெளியே ஆசிரியர் வெறும் பார்வை பார்த்தாலும், அவருடைய பார்வையின் பரிணாமம் அலாதியானது. தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், விடுதலைப்புலிகள், இணையத்தில் தமிழின் வளர்ச்சி என பல துறைகளை தாண்டி அவரது பார்வை விரிவடைந்துள்ளது.

சில விசயங்கள் சமுதாயத்தில் நிகழும் போது நமக்கு சில கேள்விகள் தோன்றும் அந்த கேள்விகள் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா! யாரும் இதை கண்டுகொள்வதில்லையே என அவ்வப்போது சந்தேகங்கள் நம் மனதில் எழும். இந்த புத்தகத்தை படிக்கும் போது நமக்கு தோன்றிய பல கேள்விகளை மாலன் அவர்களும் கேட்டுள்ளார் என தெரிகிறது. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் இயலாமை காரணமாக சும்மா இருந்துவிடுகிறோம்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கும் வாரிசு அரசியல், வண்முறை அரசியல் பற்றியும், வோட்டு வாங்குவதற்காக இங்கே ஒன்று பேசிவிட்டு வெளிநாடு சென்று அங்கே சம்பிரதாயம் என்ற பெயரில் மாற்றி பேசிவிட்டு திரும்பவும் இங்கே வந்து பழையபடி பல்டி அடிக்கும் அரசியல்வாதிகளை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளை படிக்கும் போது இந்த விசயம் நமக்கு புரிகிறது. மாலன் அவர்கள் கட்டுரை எழுதுவதனாலோ அதை நாம் படிப்பதாலோ மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை ஆனால் குறைந்த பட்சம் சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மை நிலைமை தெரிந்துகொள்ள அவருடைய கட்டுரைகள் நமக்கு உதவும்.

மாலன் அவர்களின் கட்டுரைகளை புதியதாக கட்டுரை எழுதுபவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும். கற்பனையாக எழுதாமல் தனது கருத்துக்களை மேலோட்டமாக சொல்லி, சொல்லவந்த விசயத்திற்கு தேவையானவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே எடுத்துள்ளார். உதாரணமாக கலைஞரை பற்றி எழுதுகிறார் என்றால், என்னென்ன தேதிகளில் எந்தெந்த பத்திரிக்கைகளில் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார். தற்போது குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட பத்திரிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் என முழு ஆதாரத்தோடு விளக்கி தன்னுடைய கருத்தை உறுதிபடுத்துகிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆய்வறிக்கை போல் தெளிவாக இருக்கிறது. ராமர் பாலம் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதிலுள்ள அனைத்துதரப்பு விசயங்களையும் ஆதாரத்தோடு கொடுத்து ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்ற கலைஞரின் கேள்விக்கு ஸ்டாலின் எப்படி பாலம் கட்டினாரோ அதே போல்தான் ராமனும் பாலம் கட்டினார் என தெளிவாக கட்டுரையை பதிவு செய்துள்ளார். சினிமாவில் விஜயகாந்த் ஒவ்வொரு விசயத்திற்கும் புள்ளி விவரமாக விளக்குவாரே அதுபோல தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும் உதாரணமாக பெட்டோல், டீசல் விலை உயர்வு சம்பந்தமான கட்டுரையை சொல்லலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் தேவையான விபரங்களை எங்கிருந்து பெருகிறார் என தெரியவில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமான பண்புடன் எழுதியுள்ளார்.

மாலன் அவர்களின் கட்டுரைகள் சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக கொண்டது. எனவே அவர் கட்டுரைகளை எழுதிய தேதிகளில் நடந்துகொண்டிருந்த பல விசயங்கள் தற்போது முடிவுக்கு வந்த பிறகு நாம் புத்தகத்தை படிப்பதால் பல விசயங்கள் மனதில் தோன்றுகின்றன. குறிப்பாக 05.07.2006-ல் ஆசிரியர் விடுதலை புலிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் விடுதலைப்புலிகளின் பிடிதளர்ந்து வருவதை குறிப்பிட்டு அவர்களின் அடிப்படை எண்ணமே மாற வேண்டும். அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் இதை படிக்கும் போது புலிகளின் இப்போதைய நிலைமை ஞாபகம் வருகிறது. அதே போல தேர்தலில் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி விஜயகாந் தேர்ந்தெடுத்த விருதாச்சலம் தொகுதி நிலவரம் பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் குறிப்பிட்டு ரசிகர்கள் உழைத்தால் வெற்றி பெறலாம் என்று எழுதியிருந்ததையும் குறிப்பிடலாம்.

ஆட்கள் மாறினால் ஆட்சி மாறலாம் அரசியல் மாறாது என்பது பற்றி எழுதியுள்ள கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி கேட்டு வாக்கு சீட்டு பயன்படுத்துவதால் உண்டாகும் கல்லஓட்டு பிரச்சனையை எழுதியிருந்தார். கடந்த தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்கு பதிவு நடைபெற்றாலும் கல்லஓட்டு குறையாது என்பதை புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தில் பல இடங்களில் அரசியல்வாதிகள் நமக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை ஆதரத்தோடு நிருபித்துள்ளார். அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை அதன் அடிப்படையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வழியுருத்தியுள்ளார். உதாரணமாக காவிரி நீர் பிரச்சனை விவகாரத்தில் நீதி மன்றத்தில் மேல் முறை செய்ய முடியாது என விளக்கியிருப்பதை கூறலாம்.

கண்ணகிக்கு அறிவு இருக்கிறதா என ஆரம்பித்து கண்ணகியை பற்றி மதிப்பு குறைவாக பெரியார் எழுதிய கட்டுரையை படித்திருக்கிறேன் அவரின் கொள்கைகளை பின்பற்றும் கலைஞர் அதற்கு நேர்மாறாக கண்ணகிக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கிறார் இந்த முரண்பாடான விசயத்தில் ஆசிரியர் ஒரு கட்டுரையில் ”படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது” என அருமையான கேள்விகேட்டுள்ளார். இந்திய வம்சாவளி பற்றி ஆசிரியர் எழுதியுள்ளது மிகவும் உண்மை எதை கொண்டாதுவது என்ற வரைமுறை நமக்கு தெரிவதில்லை.

இந்த புத்தகத்தின் மூலமாக பல புதிய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது அவை:
அமெரிக்க அதிபர்கள் யாராலும் வெள்ளை புறாவை பறக்க வைக்க முடியாது என்பதையும், அமெரிக்காவின் உண்மை நிலவரம் பற்றியும் தெளிவாக உணர முடிகிறது. மொத்தமுள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் அமெரிக்கா தனது படையை நிறுத்தியுள்ளதையும். ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணங்களை 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் அவர்களின் நடைமுறை பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் தினம் என்பது காதலர் தினம் போல்தான் என நினைத்திருந்தேன். அதற்கு ஒரு அர்த்தமுள்ள வரலாறு இருப்பதை மாலன் அவர்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிந்தது. சென்னையின் வரலாற்றை படிக்கும்போது சென்னைக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புத்தகத்தில் ஒரு இடத்தில் அருமையான ஒரு வாசகம் வருகிறது “பயன்படுத்தாத அறிவு சுமை” இந்த புத்தகத்தை முழுவதும் படித்ததும் ஒரு விசயம் புரிகிறது. மாலன் அவர்கள் தான் கற்ற, கேட்ட, பார்த்த என அனைத்து விசயங்களையும் தனக்கு சுமையாக இலலாத வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்

URL IS: http://nhm.in/shop/978-81-8493-063-4.html


Tuesday, July 14, 2009

ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஆண் எப்போது அழகு என்று ராதிகா அளித்த பேட்டியில் தனது தந்தைக்கு எழுத படிக்க தெரியாது ஆனால் படித்தவர்கள்கூட பேசாத பல விசயங்களை அவர் பேசுவார் அதன் ரகசியம், அதற்கென ஒரு ஆளை வேலைக்கு வைத்து தினமும் செய்தித்தாளில் வரும் அனைத்து விசயங்களையும் அறிந்துகொண்டு மற்றவர்களிடம் உரையாடுவார் என்று கூறியிருந்தார். தன்னிடமிருக்கும் குறைகளை குறையே இல்லாதவகையில் மற்றியமைத்துக்கொண்ட இந்த ஆச்சரியமான மனிதரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த புத்தகத்தின் மூலமாக அவரைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.யார், சிவாஜிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை M.R.ராதா என்று தெரிந்தாலும், நடைபெற்ற பல நிகழ்வுகளால் அவரை கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் இருந்தாலும் அதையும்மீறி இன்றளவும் M.R.ராதாவைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க முக்கியக்காரணம் அவருடைய ஆளுமைப்பண்புகள் மற்றும் மனிதர்களை அவர் படித்திருந்த விதம். ஏதோ சினிமா நடிகரைப்பற்றி படிக்கிறோம் என்றில்லாமல் இந்த புத்தகத்தில் அவரின் அனுபவத்தின் வாயிலாக நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் உண்டு. ஒரு துறையில் புதிதாக நாம் நுழையும்போது யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கதாநாயகனாக அறிமுகமாகப்போகும் அசோகனுக்கு M.R.ராதா சொல்லும் புத்திமதியிலேயே நாமும் புரிந்துகொள்ளலாம். அசோகன் அவர்களால் கதாநாயகனாக பிரகாசிக்க முடியாமல் போன காரணத்தை ஆரம்பத்திலேயே சொன்ன M.R.ராதாவின் அனுபவம் சிறப்புவாய்ந்தது.

M.R.ராதாவிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய இரண்டு விசயங்கள் உள்ளன:

1. நம்முடைய குறைகள் என்னென்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அதை நிறைவான விசயங்களாக மற்றிக்கொள்வது. தனக்கு எழுதப்படிக்க தெரியாது இதனால் அன்றாட செய்திகளை அறிந்துகொள்ள முடியாது இதை ஒரு குறையாக கருதாமல் அதற்காக ஒரு நபரை நியமித்து செய்திகளை வாசித்துக்காட்ட சொல்லி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை நாடகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். சினிமாவில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார் அதை அவரே ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் ‘கனேசன் மாதிரியெல்லாம் எனக்கு வராது அதனால நான் என்ன செய்கிறேனோ அதை படம் எடுத்துக்க’.

2. நம்மைவீட மற்றவர்கள் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற எண்ணம். நாடகம் பார்க்க பெரியார், அண்ணா போன்ற பெரியவர்கள் வந்திருக்காங்க என்று சொல்லும் போது பதட்டபடாமல் வரட்டுமே இப்ப என்ன அதுக்கு ‘என்னைவீட பெரியவங்களா நான் யாரையும் நினைத்துகூட பார்ப்பதில்லை’ என்று சொல்கிறார். சொல்வதோடு இல்லாமல் அதை பல இடங்களில் செய்தும் காட்டியிருக்கிறார். நாமாக இருந்தால் ஆங்கிலம் எனக்கு தெரியாது தமிழில் சொல்லுங்க என்று சொல்லுவோம் அதையே M.R.ராதா இப்படி சொல்கிறார் ‘நீங்க ஆங்கிலத்தில் பேசினா எனக்கு மட்டும்தான் புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதனால தமிழில் பேசுங்க’ அதுவும் தன்னை கைது செய்ய வந்திருக்கும் போலிஸிடம் பேசுவதையும், சிவாஜி இம்பால கார் கொடுக்க மறுக்கும்போது அதற்கு கோபப்படாமல் M.R.ராதா என்ன செய்தார் என்று படித்தீர்களானால் அவருடைய அளுமை உங்களுக்கு புரியும்.

புத்தகத்தை படிக்கும் போது ஒரு விசயம் நமக்கு புரிகிறது அந்தகாலத்தில் இருந்தவர்கள் ஒரு நேரடியான அனுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். என்.எஸ்.கே மீது M.R.ராதா கோபம் கொள்வதும் அதை கேள்விப்பட்டு M.R.ராதா முன்பு வந்து நின்று சுடுடா என என்.எஸ்.கே கூறுவதாகட்டும். அண்ணாபற்றி விமர்சனம் செய்து அதை புத்தகமாக எழுதி அண்ணாவிடமே M.R.ராதா கொடுப்பதாகட்டும். எம்.ஜி.யாரைகூட ஆள்வைத்து சுடவில்லை தானே நேரடியாக சென்று சுட்டிருக்கிறார். பிரச்சனைகள் முடிந்த பிறகு மனோரமாவின் மகன் திருமணத்தில் எம்.ஜி.யாரிடம் சென்று என்ன ராமசந்திரா செளக்கியமா என M.R.ராதா விசாரிப்பதாகட்டும், சரியோ தவறோ அதை நேரடியாகவே செய்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. பல இடங்களில் தனக்கு சரியென பட்ட விசயத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே சென்று அவர்களை கிண்டல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத பெரியாரிடம் பணம் கொடுத்து இப்போது உங்களுக்கு உடல் சரியாகிவிடும் என்று கூறுவதையும் ரங்காராவிடம் இவரு நல்லவரா நடிக்கிறவரு லேட்டா வராரு என்று சொல்வதையும் உதாரணமாக கூறலாம்.

M.R.ராதாவின் செயல்பாடுகள் சற்று முரட்டுத்தனமாக நமக்கு தோன்றினாலும் அவரைப்பொருத்தவரையில் அது சாதாரணமாக செயலாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் அவரது மனநிலை சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பக்குவப்பட்டிருக்கிறது. பல ஊர்களுக்கு தனியாக பயணம் செய்து, பல மனிதர்களிடம் வேலைபார்த்து அடிபட்டு, மிதிபட்டு மனிதர்களை படித்திருக்கிறார் இதனால் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், கோபம் ஏற்படும்போதும் சம்பந்தப்பட்டவர்களை போட்டுத்தள்ளுவது என்றே சிந்திதிருக்கிறார். எம்.ஜியாருக்கு முன்பே பலபேரிடம் சுட்டுவிடுவேன் என்று கூறுவது, திருப்பதிக்கு குண்டு வைக்க முயற்சிப்பது என அவரது சிந்தனையே அப்படித்தான் இருந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக எல்லாம் முடிந்து இறுதியாக இப்படி சொல்கிறார் ” குடும்பத்தில் சண்டை வருவதில்லையா, நன்பர்களுக்கிடையே சண்டை வருவதில்லையா அதுபோல்தான் இதுவும், இரண்டு நன்பர்கள் அடிச்சிகிட்டோம். கம்பிருந்தால் கம்புல அடிச்சிப்போம், கத்தியிருந்தா கத்தியில அடிச்சிப்போம், துப்பாக்கி இருந்தது துப்பாக்கில அடிச்சிக்கிட்டோம் அவ்வளவுதான்”.

M.R.ராதாவின் பிரச்சனையே அவர் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டிருப்பதுதான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாத்தி பேசுவது, சக மனிதர்களைக் கண்டால் சஞ்சலமடைந்து சொன்னதை மாற்றி பேசுவது போன்ற விசயங்களெல்லாம் அவரிடம் கிடையாது. எல்லா சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலில் கடவுள் இல்லைனு சொன்னாங்க, பிறகு அண்ணா ஒரே கடவுள் என்று சொன்னார் பெரியாரும் அதை ஒத்துக்கிட்டார் ஆனா அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். சாதாரண தொண்டனாக இருந்தால் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என சென்றிறுப்பான்.

ஆசிரியர் எம்.ஜியாருக்கும் M.R.ராதாவிற்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து எம்.ஜியாரை சுடும் வரை விறுவிறுப்பாக எழுதியுள்ளார். அந்த சமயத்தில் M.R.ராதாவின் பேச்சுக்கள் எப்படி தவறாக பொருள்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருப்பது சிறப்பு.

M.R.ராதாவிடம் நாம் அசந்து போகும் இரண்டு விசயங்கள் உண்டு. 1. உதவி கேட்டதற்காக உடல் நிலை சரியில்லாவிட்டாலும் காலில் ரத்தம் வடிய மேடையேறி நடித்து கொடுத்த பண்பு மற்றும் தன்னுடன் பணியாற்றுபவருகளிடம் அவர்காட்டும் பரிவு. 2.அரசாங்கமே எதிர்த்தாலும் தான் நினைத்ததை செய்து காட்டும் போரட்ட குணம்.

தற்போதுள்ள சினிமா நடிகைகளிடம் ஒரு கேள்வி அவ்வப்போது கேட்கப்படுவண்டு ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ பதில் சொல்ல முடியாமல் ஒருவழியாக சமாளித்து அடுத்த கேள்விக்கு சென்று விடுவார்கள். யாராவது ஒரு நடிகரின் பெயரை சொல்லிவிட்டால் தன்னுடைய மார்கெட் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம். எந்த பிரச்சனையும் இல்லாத இந்த காலகட்டத்திலேயே இப்படி என்றால்… M.R.ராதாவின் இறுதி சடங்கில் சினிமா நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள் என்று படிக்கும்போது அப்போதைய சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மிகச்சிறந்த ஆளுமை குணம் நிறைந்த ஒருவரைப்பற்றி படிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-636-5.html