Saturday, August 8, 2009

”என் ஜன்னலுக்கு வெளியே” தலைப்புக்கு ஏற்றமாதிரிதான் புத்தகமும் அமைந்துள்ளது. ஜன்னலோரம் உட்கார்ந்து நாம் வீதியை பார்ப்பதுபோல், ரசிப்பதுபோல், மாலன் அவர்கள் சமுதாயத்தை பார்த்துள்ளார், ரசித்துள்ளார். சமுதாயத்தில் நாம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜன்னலுக்கு வெளியே ஆசிரியர் வெறும் பார்வை பார்த்தாலும், அவருடைய பார்வையின் பரிணாமம் அலாதியானது. தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், விடுதலைப்புலிகள், இணையத்தில் தமிழின் வளர்ச்சி என பல துறைகளை தாண்டி அவரது பார்வை விரிவடைந்துள்ளது.

சில விசயங்கள் சமுதாயத்தில் நிகழும் போது நமக்கு சில கேள்விகள் தோன்றும் அந்த கேள்விகள் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா! யாரும் இதை கண்டுகொள்வதில்லையே என அவ்வப்போது சந்தேகங்கள் நம் மனதில் எழும். இந்த புத்தகத்தை படிக்கும் போது நமக்கு தோன்றிய பல கேள்விகளை மாலன் அவர்களும் கேட்டுள்ளார் என தெரிகிறது. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் இயலாமை காரணமாக சும்மா இருந்துவிடுகிறோம்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கும் வாரிசு அரசியல், வண்முறை அரசியல் பற்றியும், வோட்டு வாங்குவதற்காக இங்கே ஒன்று பேசிவிட்டு வெளிநாடு சென்று அங்கே சம்பிரதாயம் என்ற பெயரில் மாற்றி பேசிவிட்டு திரும்பவும் இங்கே வந்து பழையபடி பல்டி அடிக்கும் அரசியல்வாதிகளை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளை படிக்கும் போது இந்த விசயம் நமக்கு புரிகிறது. மாலன் அவர்கள் கட்டுரை எழுதுவதனாலோ அதை நாம் படிப்பதாலோ மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை ஆனால் குறைந்த பட்சம் சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மை நிலைமை தெரிந்துகொள்ள அவருடைய கட்டுரைகள் நமக்கு உதவும்.

மாலன் அவர்களின் கட்டுரைகளை புதியதாக கட்டுரை எழுதுபவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும். கற்பனையாக எழுதாமல் தனது கருத்துக்களை மேலோட்டமாக சொல்லி, சொல்லவந்த விசயத்திற்கு தேவையானவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே எடுத்துள்ளார். உதாரணமாக கலைஞரை பற்றி எழுதுகிறார் என்றால், என்னென்ன தேதிகளில் எந்தெந்த பத்திரிக்கைகளில் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார். தற்போது குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட பத்திரிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் என முழு ஆதாரத்தோடு விளக்கி தன்னுடைய கருத்தை உறுதிபடுத்துகிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆய்வறிக்கை போல் தெளிவாக இருக்கிறது. ராமர் பாலம் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதிலுள்ள அனைத்துதரப்பு விசயங்களையும் ஆதாரத்தோடு கொடுத்து ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்ற கலைஞரின் கேள்விக்கு ஸ்டாலின் எப்படி பாலம் கட்டினாரோ அதே போல்தான் ராமனும் பாலம் கட்டினார் என தெளிவாக கட்டுரையை பதிவு செய்துள்ளார். சினிமாவில் விஜயகாந்த் ஒவ்வொரு விசயத்திற்கும் புள்ளி விவரமாக விளக்குவாரே அதுபோல தெளிவாக இருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும் உதாரணமாக பெட்டோல், டீசல் விலை உயர்வு சம்பந்தமான கட்டுரையை சொல்லலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் தேவையான விபரங்களை எங்கிருந்து பெருகிறார் என தெரியவில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமான பண்புடன் எழுதியுள்ளார்.

மாலன் அவர்களின் கட்டுரைகள் சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விசயங்களை அடிப்படையாக கொண்டது. எனவே அவர் கட்டுரைகளை எழுதிய தேதிகளில் நடந்துகொண்டிருந்த பல விசயங்கள் தற்போது முடிவுக்கு வந்த பிறகு நாம் புத்தகத்தை படிப்பதால் பல விசயங்கள் மனதில் தோன்றுகின்றன. குறிப்பாக 05.07.2006-ல் ஆசிரியர் விடுதலை புலிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் விடுதலைப்புலிகளின் பிடிதளர்ந்து வருவதை குறிப்பிட்டு அவர்களின் அடிப்படை எண்ணமே மாற வேண்டும். அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் இதை படிக்கும் போது புலிகளின் இப்போதைய நிலைமை ஞாபகம் வருகிறது. அதே போல தேர்தலில் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி விஜயகாந் தேர்ந்தெடுத்த விருதாச்சலம் தொகுதி நிலவரம் பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் குறிப்பிட்டு ரசிகர்கள் உழைத்தால் வெற்றி பெறலாம் என்று எழுதியிருந்ததையும் குறிப்பிடலாம்.

ஆட்கள் மாறினால் ஆட்சி மாறலாம் அரசியல் மாறாது என்பது பற்றி எழுதியுள்ள கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி கேட்டு வாக்கு சீட்டு பயன்படுத்துவதால் உண்டாகும் கல்லஓட்டு பிரச்சனையை எழுதியிருந்தார். கடந்த தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்கு பதிவு நடைபெற்றாலும் கல்லஓட்டு குறையாது என்பதை புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தில் பல இடங்களில் அரசியல்வாதிகள் நமக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை ஆதரத்தோடு நிருபித்துள்ளார். அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை அதன் அடிப்படையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை வழியுருத்தியுள்ளார். உதாரணமாக காவிரி நீர் பிரச்சனை விவகாரத்தில் நீதி மன்றத்தில் மேல் முறை செய்ய முடியாது என விளக்கியிருப்பதை கூறலாம்.

கண்ணகிக்கு அறிவு இருக்கிறதா என ஆரம்பித்து கண்ணகியை பற்றி மதிப்பு குறைவாக பெரியார் எழுதிய கட்டுரையை படித்திருக்கிறேன் அவரின் கொள்கைகளை பின்பற்றும் கலைஞர் அதற்கு நேர்மாறாக கண்ணகிக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கிறார் இந்த முரண்பாடான விசயத்தில் ஆசிரியர் ஒரு கட்டுரையில் ”படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது” என அருமையான கேள்விகேட்டுள்ளார். இந்திய வம்சாவளி பற்றி ஆசிரியர் எழுதியுள்ளது மிகவும் உண்மை எதை கொண்டாதுவது என்ற வரைமுறை நமக்கு தெரிவதில்லை.

இந்த புத்தகத்தின் மூலமாக பல புதிய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது அவை:
அமெரிக்க அதிபர்கள் யாராலும் வெள்ளை புறாவை பறக்க வைக்க முடியாது என்பதையும், அமெரிக்காவின் உண்மை நிலவரம் பற்றியும் தெளிவாக உணர முடிகிறது. மொத்தமுள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் அமெரிக்கா தனது படையை நிறுத்தியுள்ளதையும். ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணங்களை 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் அவர்களின் நடைமுறை பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் தினம் என்பது காதலர் தினம் போல்தான் என நினைத்திருந்தேன். அதற்கு ஒரு அர்த்தமுள்ள வரலாறு இருப்பதை மாலன் அவர்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிந்தது. சென்னையின் வரலாற்றை படிக்கும்போது சென்னைக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புத்தகத்தில் ஒரு இடத்தில் அருமையான ஒரு வாசகம் வருகிறது “பயன்படுத்தாத அறிவு சுமை” இந்த புத்தகத்தை முழுவதும் படித்ததும் ஒரு விசயம் புரிகிறது. மாலன் அவர்கள் தான் கற்ற, கேட்ட, பார்த்த என அனைத்து விசயங்களையும் தனக்கு சுமையாக இலலாத வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்

URL IS: http://nhm.in/shop/978-81-8493-063-4.html