Tuesday, March 2, 2010

மருதமலைக்கு மிக அருகில் வசித்த சமயத்தில் அடிக்கடி மருதமலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மருதமலைக்கு செல்வது தொடர்பாக யாராவது சந்தேகம் கேட்டால் விபரமாக சொல்லிவிடுவேன். இதனால் மருதமலை பற்றி எல்லா விசயங்களும் எனக்கு தெரியும் என்ற நினைப்பில் இருந்தேன். சமீபத்தில் மருதமலை தொடர்பாக இணைய தளத்தில் செய்திகளை படித்துக் கொண்டிருந்தபோது, மருதமலை என பெயர் வரக் காரணம் என்ன என தெரிந்தபோது மிக ஆச்சரியமாக இருந்தது! மருத மரங்கள் அங்கிருப்பதால் மருதமலை என பெயர் வந்ததாம். பல முறை அங்கு நான் போயிருந்தாலும் ஒருதடவை கூட மருத மரங்களை பார்த்ததில்லை. இதன் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் ஒரு இடத்திற்கு பல முறை சென்றிருந்தாலும், அந்த இடத்தைப் பற்றி முழுமையாக நம்மால் தெரிந்துகொள்ள இயலாது. எனவே ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்பாக அந்த இடத்தைப் பற்றிய சிறப்புகளை கொஞ்சமாவது படித்துவிட்டு சென்றால் நம் பயணம் முழுமையடையும். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் மருதமலைக்கு செல்வதில் மட்டுமல்ல சென்னைக்கு செல்வதற்கும் பொருந்தும்.

புத்தக்தை படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசிரியர் நந்திதா கிருஷ்ணா நம்முடைய நினைவிற்கு நிஞ்சயம் வருவார். காரணம் இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது அவருடைய சொந்த கருத்துக்களோ, கற்பனையான விசயங்களோ அல்ல, என்ன உள்ளதோ அதை அப்படியே எழுதியிருக்கிறார். அதைத் தவிர அதிகப்படியாக வேறு எதையும் எழுதவில்லை. ஒரு ஆய்வறிக்கையை படிப்பதுபோல புள்ளி விபரங்களுடன் மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார். இவ்வளவு விசயங்களை உண்மையாக தெரிந்துகொள்ளாமல் எழுத இயலாதே! இதற்காக ஆசிரியர் ஒரு ஆராய்சியே செய்திருப்பார் என்று நினைத்துகொண்டு கடைசி பக்கத்தை பார்த்தால் உண்மையிலேயே ஆசிரியர் ஒரு ஆய்வாளரே என்ற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. உதாரணமாக கூவம் நதி பற்றி எழுதும்போது அதையொட்டி அமைந்துள்ள சிவன் கோவில் ஆவணம் பற்றி ஆசிரியர் சொல்லி அதன் மூலமாக கூவம் நதியை பற்றி விளக்கியிருபதில் ஆசிரியரின் ஆய்வு பற்றி புரிகிறது. 25 ரூபாய் புத்தத்தில் அந்த தொகையைவீட அதிகமாகவே உழைப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சென்னை வெய்யிலில் கடுப்பாகிய ஒருவன் கண்களை மூடி அமர்ந்து, சென்னை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தால், அந்த கற்பனையில் என்னென்ன காட்சிகள் வருமோ அப்படித்தான் ஆரம்பத்தில் சென்னை இருந்ததாம்! சாலையின் இருபுறமும் மரங்கள் இருந்தனவாம், பலவிதமான தோப்புகள் இருந்தனவாம், நாம் எவ்வளவு அழிவுகளை ஏற்படுத்தி விட்டோம் என்பதை உணர முடிகிறது. வெரும் வியாபார சிந்தனை மட்டும் மேலோங்கி இருந்தால் ஒரு நகரம் என்ன நிலையை அடையும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

புத்தகத்தில் இதுவரை நான் அறிந்திராத பல பொது அறிவு விசயங்களையும் ஆசிரியர் சம்பந்தப்பட்ட இடங்களில் எழுதியிருக்கிறார். அதை படிப்பதற்கு புதுமையாக இருந்தது. நமது மாநில மரம், மாநில மலர், மாநில விலங்கு, மாநில பறவை என பலவிதமான பொது அறிவு விசயங்களும் புத்தகத்தில் உண்டு.

சென்னையின் வியர்வையிலும், புழுதியிலும் அதன் வரலாறு மறைந்து விட்டது அல்லது அவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். சென்னை இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க நகரமா! என ஆச்சரியம் உண்டாகிறது. சென்னையில் உள்ள ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு வரலாற்று அர்த்தம் இருக்கிறது என்பதை ஆசிரியர் ஆணித்தரமான விசயங்களால் விளக்கும் போது வியப்பு உண்டாகிறது.

ஏதோ ஒரு கோவிலுக்கு சென்றோம் சாமியை கும்பிட்டோம் என்ற சிந்தனைதான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் ஒரு ஊரில் கோவில் எதற்கு இருக்கிறது அதனால் அந்த ஊருக்கு என்ன நன்மை என்பதை அறிவியல் பூர்வமாக ஆசிரியர் விளக்கியிருப்பது அருமையாக உள்ளது. பழங்கால மக்களின் அறிவை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க இயலாது. ஒரு கோவில், அதற்கு ஒரு குளம், அந்த குளம் நோக்கியபடி அந்த ஊரில் உள்ள வீடுகளின் மேற்கூறை அமைந்திருக்கும் இதன் மூலமாக மழை நீர் முழுவதும் அந்த குளத்தில் சேருகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் அதிகரிக்கிறது. ஊரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது... என்று ஆசிரியர் சொல்லிக்கொண்டேபோக அந்த காலத்து மக்கள் அர்த்தமில்லாமல் எதுவும் செய்ய வில்லை என்று புரிகிறது. மேலும் நம்மால் நாகரீகம் என்ற பெயரில் கட்டிடங்களின் வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

வெரும் புலம்பலாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் ஆசிரியர் சொல்லியிருப்பது புத்தகத்திற்கு மேலும் மதிப்பை அதிகரிக்கிறது. சரி எல்லாம் முடிந்து விட்டது இனி கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை இனி என்ன செய்யலாம் என்ற நிலை வருகையில் கொஞ்ச நாள் பரபரப்பாக நம்மால் பேசப்பட்ட மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் எதிர்கால பிரச்சனைகளை நம்மால் சமாளிக்க இயலும் என்று ஆசிரியர் சொல்லும் போது இது சென்னைக்கு மட்டுமல்ல அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்ற எண்ணம் தோண்ருகிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு பொருத்தமான அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு பகுதியில் சொல்லப்படும் விசயங்களை நம்மால் காட்சிப்படுத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது.

மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்த புத்தகத்தில் மிக அதிகமான அறிய விசயங்கள் அடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அழகிய மற்றும் அர்த்தமுள்ள இந்த புத்தகத்தை வாங்க இங்கே செல்லுங்கள்: http://nhm.in/shop/978-81-8493-253-9.html