Thursday, June 25, 2009

நம்மிடையே பொதுவாக I.A.S படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் பற்றிதான் அதிகம் விவாதிக்கப்படுகிறதே தவிர, I.A.S பணி எப்படிப்பட்டது என்பதை பற்றிய விவாதங்கள் குறைவு மேலும் அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்கும் அளவுக்கு I.A.S அதிகாரிகளைப் பற்றி செய்திதாள்களில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை இதனால் அந்த பணி பற்றிய விசயங்களை நாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. B.S.ராகவன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகம் I.A.S அதிகாரி என்பவர் யார் அவரின் பணி என்ன என்பதை பற்றியும் தற்போது உள்ள I.A.S அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பற்றியும் அறிந்துகொள்ள மிக உதவியக இருக்கும்.

ராகவன் அவர்களின் பணி அனுபவங்கள் நாம் எதிர்பார்க்காத பல அனுபவங்களை கடந்து செல்கிறது. ஒரு குதிரையை எப்படி நாம் அனுகவேண்டும். எந்தெந்த குதிரைகள் எப்படி நடந்துகொள்ளும். குதிரை சவாரி செய்யும் போது ஏற்படும் அனுபவங்கள், வன விலங்குகள் பற்றிய விபரங்கள், புலி வேட்டை பற்றிய விபரங்கள், யானையுடன் பழகிய அனுபவங்கள், பேய் உலாவும் சம்பவங்கள் என நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அனுபவங்களை பெற்றுள்ளார்.

ஒரு I.A.S அதிகாரியின் அனுபவம் பற்றிய புத்தகத்தை படிக்கும் போது ஏற்படும் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் பல தலைவர்களை பற்றிய விசயங்களை நாம் ஒரே புத்தகத்தில் அறிந்துகொள்ள முடியும். நேரு, இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ், தேச பந்து சித்த ரஞ்சன், பி.சி.ராய், அண்ணா துரை, ஜோதிபாசு, சென்குப்தா, எம்.ஜி.யார் என பல தலைவர்களை பற்றிய விபரங்களை இந்த புத்தகத்தில் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒருவரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அவரைப்பற்றி எழுதியுள்ள புத்தகங்களை படித்தால் முழுமையான விசயங்களை தெரிந்துகொள்ள முடியாது ஏனெனில் அதில் அவரைப்பற்றிய எதிர்மறையான விசயங்கள் இருக்காது. எம்.ஜி.யாரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினால் எம்.ஆர்.ராதா பற்றிய புத்தங்களையும் நாம் படிக்க வேண்டும் அப்போதுதான் எம்.ஜி.யாரைப் பற்றிய விசயங்களை நாம் அறிந்துகொள்ள முடியும் அதுபோல ராகவன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகத்தின் வழியாக பல தலைவர்களின் ஆளுமை பண்புகள் மற்றும் எதிர்மறையான விசயங்கள் போன்றவற்றை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

காமராஜர், நேரு, இந்திராகாந்தி போன்ற பெருந்தலைவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சில சூழ்நிலைகளில் பதட்டமடைவார்கள், பதட்டம் ஏற்படும் போது எப்படி நடந்துகொள்வர்கள் என்பதையும் இந்த புத்தகத்தில் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. டி.என்.சேஷன் அண்ணாதுரை அவர்களை பற்றி எழுதியதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் காமராஜர் திராவிடர் கலகத்தை விமர்சித்தது போன்ற விசயங்கள், அந்த தலைவர்கள் பற்றிய நேரடியான புத்தகத்தில் கூட இருக்காது என்றே நினைக்கிறேன்.

சாஸ்திரி அவர்களின் வியக்கவைக்கும் ஆளுமைப் பண்புகளையும் மற்றும் அவருடைய தவறுகளையும் இந்த புத்தக்த்தின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்தி இந்த இந்த விசயங்களில் சிறந்தவாரக இருந்தார், சாஸ்திரி அவர்கள் இந்த இந்த விசயங்களில் தவறுகள் செய்தார் என்று படிக்கும் போது அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

தேவையான அனைத்து ஆயுதங்களும் இருந்தால் நானே போரை வழிநடத்தி வெற்றியடைவேனே என்ற லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் வார்த்தைகள் சோர்வடைந்தவர்களை போரட தூண்டும் அற்புதமான வார்த்தைகள்.

ஒருதலைபட்சமாக மற்றவர்கள் பற்றியே குறை கூறாமல் தன்னுடைய அனுபவத்தில் தன்னுடைய தவறான புரிதல்களையும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

எல்லா காரியங்களிலும் வெற்றியடைவது எப்படி என்று பத்து தலைப்புகளில் ராகவன் அவர்கள் விளக்கியுள்ள விதம் மிக அருமையாக உள்ளது. இந்த விசயம் அனைவருக்கும் பயனுள்ளவையாக இருக்கும். பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி, எதிரில் உள்ளவரின் சிந்தனையை வெளிக்கொண்டுவருவது எப்படி என்பது போன்ற விசயங்களில் அவரின் சிறந்த அனுபவம் வெளிப்படுகிறது.

ராகவன் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக வங்கதேச மக்களின் கலாச்சாரம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, ஒற்றுமையாக போரடும் குணம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் அவர்களின் மீது தவறான புரிதல்களை ஏற்படுத்தும் அவர்களின் அதீதமான கோபத்தின் ஞாயமான காரணங்களையும் விளக்கியுள்ளார். நாம் நம்மால் சகித்துக்கொள்ள முடியாத விசயங்களுக்கு கூட கோபப்படுவதில்லை ஆனால் மேற்கு வங்க மக்கள் அப்படி இருபதில்லை என்று கூறி ஆசிரியர் சில சம்பவங்களை விளக்கியுள்ளார் அவற்றை படிக்கும் போது அவர்களின் கோபம் ஞாயமாகத்தான் தோன்றுகிறது.

நாம் யாரை முன் மாதிரியாக கொண்டிருக்கிறோம், எந்த விசயங்களில் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் நம்முடைய இலட்சியங்கள் அமையும். அதற்கு சரியான முன் உதாரணமாக ராகவன் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. முன் மாதிரி விசயத்தில் தான் ஒரு அதிர்ஷ்டசாலி ஏனெனில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தலைவர்களுடன் தான் பணியாற்றியுள்ளேன் என அவரே இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார். காந்திஜியுடன் பஜனை பாடுவது, நேருவின் உரையாடளை ரேடியோவில் கேட்க கொண்டிருந்த ஆர்வம் என அவரது ஆரம்ப கால ஆர்வங்களை படித்துவிட்டு பின்னர் அவரது அனுபவங்களை படிக்கும் போது அவர் ஆர்வம் காட்ட தேர்ந்தெடுத்த விசயங்கள் மற்றும் அவர் தேர்வு செய்திருந்த முன் மாதிரிகள் தான் அவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது. ஒரு சரியான முன்மாதிரி அமையாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு தற்போதுள்ள இளைஞர்களின் நிலையையே உதாரணமாக காட்டியுள்ளார். அதிகபட்சமாக சினிமாதான் அவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்ற அவரது கவலை ஞாயமானதுதான்.

ஒரு I.A.S அதிகாரி தான் சார்ந்திருக்கும் மாவட்டத்தில் எந்தெந்த விசயங்களுக்கு பொறுப்பாளி என பட்டியலிட்டுள்ளார் படிக்கும் போது இவ்வளவு வேலைகளை எந்த ஒரு அதிகாரியும் செய்வதில்லை என்பது நமக்கே புரியும் அதை உறுதி செய்யும் விதமாக ஆசிரியரே தற்போது உள்ளவர்களில் நூறு பேரில் முப்பது, நாப்பது பேர் தவறானவர்களாக இருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார்.

இது ஒரு I.A.S அதிகாரியின் பணி அனுபவமாக இருந்தாலும் அவருடைய அனுபவம் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8368-954-0.html

No comments: