Friday, July 3, 2009

மாற்றம் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத, அனுமதிக்காத எந்த விசயமும் காலம் கடந்து நிலைத்திருக்காது. அதற்கு சரியான உதாரணம் ராமாயணம் என இந்த புத்தகம் படிக்கும்போது தெரிகிறது. தான் செல்லுமிடமெல்லாம் அந்த இடத்தின் பண்புகளுக்கேற்ப மாற்றும் பெறும் தண்ணீர் போல ராமாயணம் நாடுகளை கடந்து, காலாச்சார மாற்றங்களை ஏற்று கொண்டு, அந்த அந்த நாட்டு மக்களின் பண்புகளுக்கேற்ப புது புது வடிவங்களில் உருவாகி சிறப்புடன் விளங்குகிறது.

ராமகியன் படிக்கும்போது இவ்வளவு வகையான ராமாயணம் இருக்கிறதா என நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. நமக்கு தெரிந்தது ஒன்று அல்லது இரண்டு ராமாயணம்தான் அதுவும் முழுமையாக தெரியாது. இவ்வளவு வகையான ராமாயணங்களை படித்து, தனித்தனி விசயங்களாக தொகுத்து, விருவிருப்பு குறையாமல் ஒரு புத்தகத்தை உருவாக்கியுள்ளதில் ஆசிரியரின் கடுமையான உழைப்பு தெரிகிறது.

வியாபார உலகத்தில் விற்பனையாளர்களுக்காக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு ஒரு ஊரில் செருப்பு விற்பனை செய்வதற்கு முன்னோட்டம் பார்பதற்காக ஒரு விற்பனையாளர் ஒரு ஊருக்கு செல்கிறார் அங்கே யாருமே செருப்பை பயன்படுத்துவதில்லை என்பதை காண்கிறார் எனவே இங்கே செருப்பு விற்பனை செய்ய சாத்தியமில்லை என்று திரும்பி வந்துவிடுகிறார். பின்னர் அதே ஊருக்கு இன்னொரு விற்பனையாளர் செல்கிறார் அந்த ஊரில் யாருமே செருப்பை பயன்படுத்தியதில்லை என்பதை அறிந்ததும் உற்சாகம் அடைந்து இங்கே செருப்பு விற்பனைச் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன எனவே உடனே தேவையான செருப்புகளை இங்கே அனுப்புங்கள் என கம்பெனிக்கு தகவல் அனுப்புகிறார். ஒரே இடம், ஒரே நோக்கம் ஆனால் இருவரின் சிந்தனையும் மாறுபட்டுள்ளது ஒருவர் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார், மற்றொறுவர் எதிர்மறையாக சிந்திக்கிறார். ராமாயணத்தை பொருத்தவரையிலும் இப்படித்தான் நடந்துள்ளது. இது நம் நாட்டில் நடந்திருக்க கூடாதா என ஏக்கம் கொள்கிறார்கள் தாய்லாந்து மக்கள் ஆனால் இங்கே ராமாயணத்தை குறை கண்டுபிடிக்கவும், குதர்க்கம் பேசவும்தான் பயன்படுத்துகிறோம். நாம் அதை வாழ்வியியல் நோக்கத்தோடு அனுகவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தாய்லாந்து மக்கள் ராமாயணத்தை ஒரு பண்பாடாக, கலாச்சாரமாக, வாழ்வியல் முறையாக அனுகியிருக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்வியல் சிந்தனையோடு ராமாயணத்தை அனுகியிருப்பதால் தான் தாய்லாந்து, கம்போடியா, பர்மா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவ்வளவு சிறப்பு பெற்றுள்ளது இதில் இஸ்லாமிய நாடுகளும் அடக்கம் என்பது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அருகில் உள்ளவற்றின் அருமை தெரியாது என்று சொல்லப்படும் வாக்கியம் நிஜம்தான்போல் உள்ளது.

சின்ன சின்ன கிளைக்கதைகளை இணைத்து ராமாயணத்தை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார்கள். இராவணனின் முந்தைய பிறப்பு மற்றும் ராமரின் மனித அவதார நோக்கத்திற்காக ஒரு சிறு பகுதியை இணைத்திருப்பதும், ராமர் சீதை மீது சந்தேகம்கொள்ள காரணமான ஒரு நிகழ்ச்சியை சேர்த்திருப்பதாலும் ஒரு முழுமையை உணரமுடிகிறது.

நம்மை பொருத்தவரையில் ராமர் என்ன தவறு செய்தாலும் அதை ஞாயப்படுத்தவே முயற்சி செய்வோம். தவறு செய்திருந்தாலும் ஏன் செய்தார் என்று ஞாயப்படுத்தும்விதமாக விளக்கமாக எழுதுவோம் ஆனால் ராமகியனில் ராமரின் சில தவறான மனித பண்புகளையும் அப்படியே பதிவு செய்துள்ளார்கள். சீதையை கொல் என்று சொல்லும் போதும் அவளுடைய இதயமும் மிருகத்தின் இதயம் போலவே உள்ளது என்று சொல்லும் போதும் சாராசரி மனிதனாக நமக்கு தோன்றுகிறார்.

ராவணன் இறந்த பிறகு ராமருக்கும் சீதைக்கும் பிரச்சனை ஏற்படுவதும் அதை போக்க ராமர் எடுக்கும் முயற்சிகளை படிக்கும் போது அப்படியே நம்முடைய தமிழ் சினிமாவில் வரும் கதைகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. சோகமாக இருப்பதுபோல் சூழ்நிலையை ஏற்படுத்தி, குழந்தைகளை காரணம் காட்டி, உயிர்விடப்போவதாக சொல்லி தன்னுடன் வர சீதையை அழைக்கும் போதும் சினிமாவில் பார்க்கும் அனைத்து விசயங்களும் நடக்கின்றன, சினிமாவில் வருபவர்கள் கெட்டவர்களாக இருந்து பின்னர் திருந்தி நல்லவர்களாகமாறி இதுபோன்று நடந்து கொள்வார்கள் ஆனால் ராமர் மேண்மைமிக்கவராக இருந்து பின்னர் சராசரி மனிதராக நடந்துகொள்கிறார்.

சீதை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் விசயங்களை வீட அதிகமாக இந்த புத்தகத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. சீதை தன்னம்பிக்கைமிக்கவளாக, கணவனை எதிர்த்து தனிமையில் வாழ்ந்து காட்டுபளாக, இறுதிவரை தன்னை ஒதுக்கிய கணவனுடன் சேரக்கூடாது என்ற வைராகியம் கொண்டவளாக விளங்குகிறாள்

நாடு, இனம், மொழி, கலாச்சாரம் மாறினாலும் பெண்களின் நிலையை பொருத்தவரையில் அப்படியேதான் இருக்கும் என்பதை ராமகியனிலும் அறிந்துகொள்ள முடிகிறது. சீதையிலிருந்து சிவன் மனைவி வரை அனைத்து பெண்களையும் தாழ்த்தியே எழுதப்பட்டுள்ளது.

வாலியின் இறப்பு புதுமையாக உள்ளது. வாலி கொல்லப்படவேண்டிய காரணத்தை முன்கூட்டியே உருவாக்கி, இந்தியாவில் உள்ள ராமாயணம்போல் இல்லாமல் ராமர் மீது பழி ஏற்படாதவகையில் ராமரால் வாலி கொல்லப்படும் நிகழ்ச்சியை மிக அருமையாக அமைத்துள்ளார்கள்.

ராமகியனில் நம்மை அதிர்ச்சியடைய, ஆச்சரியமைடய வைக்கும் இரண்டு நபர்கள் உண்டு ஒருவர் அனுமன் மற்றொறுவர் ராவணன். ஒழுக்கசீலராக, பிரம்மச்சாரியாக நாம் அறிந்திருந்த அனுமன் இல்லை இவர். கிட்டத்தட்ட கேம்ஸ்பாண்ட்போல அனுமனை வடிவமைத்துள்ளார்கள் செயல்திறன்மிக்கவர் அதே சமயத்தில் காமலீலையில் ஈடுபடுபவர். செல்லுமிடங்களிளெல்லம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறார். உச்சகட்டமாக ராவணனின் முன்பே மண்டோதரியை கற்பழிக்கிறார். அதே சமயத்தில் திட்டங்கள் தீட்டி வெற்றியடையவக்கும் செயல் வீரராகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்துள்ளார்.

இன்னொருவர் ராவணன் மற்றவர்களிடம் ஒப்பிடும்போது மிகுந்த ஒழுக்கமுடையவர்போலவே திகழ்கிறார். அனுமனிலிருந்து அணைவருமே பெண்கள் விசயத்தில் ராவணனைவீட ஒருபடி தாழ்ந்தவர்களாகவே உள்ளார்கள். ராவணன் மற்றவர்கள்மீது கோபம் கொள்ள காரணமான முன்கதை சுருக்கமும், சீதைமீது கொண்டிருக்கும் காதலும் ராவணனின் செயலை ஞாயப்படுத்துகிறது. ராவணன் தன்னுடைய இறுதி நாளில் தன்னுடைய முடிவை அறிந்துகொண்டு போருக்கு புறப்பட்டு செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அந்த நேரத்திலும் சீதையின் முகத்தை நினைத்துப்பார்த்து சிலாகித்து சீதை எப்போதும் என்னுடன் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்பது போன்ற விசயங்களை படிக்கும் போது ஒரு சோகமான கவிதைபோல அழகாக உள்ளது.

லாவோஸ், கம்போடிய, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகளில் ராமயணத்தை அவர்களின் நாட்டிற்கேற்ப மாற்றம் செய்து அவர்களின் வரலாற்றை விளக்க ராமாயணத்தை பயன்படுத்தியுள்ளது நமக்கு ஆச்சரியமான செய்திதான். அதிலும் பர்மிய ராமாயணத்தில் ராவணனும் சுயவரத்தில் பங்கு கொண்டு சிவதனுசுவை எடுப்பது மிகவும் சுவாரசியமான விசயம்.

ராமாயணம் பற்றி அறிந்து கொள்ள விருபுபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விசயங்களை படிக்கும்போதும் அப்படியா! என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது அதுவே இந்த புத்தகம் சிறந்த புத்தகம் என்பதற்கு உதாரணம். இந்த புத்தகத்தை விலைக்கு வாங்க கீழே உள்ள முகவரிக்கு (URL) செல்லுங்கள்.

URL IS: http://nhm.in/shop/978-81-8493-046-7.html

No comments: